இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் ஆயுர்வேதம் ( Ayurveda,), யோகா (Yoga) மற்றும் இயற்கைமருத்துவம் (Naturopathy,), யுனானி (Unani,), சித்தா (Siddha), ஓமியோபதி ( Homeopathy.) ஆகியவற்றின் முதலெழுத்துகளை இணைத்துக் கொடுக்கப்பட்ட சுருக்கப்பெயரே ஆயுஷ் (AYUSH). இம்மருத்துவ முறைகள் திட்டமான மருத்துவக் கொளகைகளை அடிப்படையாகக் கொண்டவை. நோய்களைத் தடுப்பதிலும் ஆரோக்கியத்தை வளர்ப்பதிலும் வரையறுக்கப்பட்ட கருத்துருக்களைக் கொண்டு ஓர் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை குறித்துக்காட்டுகின்றன. ஆரோக்கியம், நோய், மருத்துவம் ஆகிய அனைத்திலும் இவற்றின் அணுகுமுறை முழுமையை அடிப்படையாகக் கொண்டது. இதனால் ஆயுஷ் முறைகளில் ஒரு புதிய நாட்டம் ஏற்பட்டுள்ளது. யோகா தற்போது உலக ஆரோக்கியத்தின் சின்னமாக மாறிவிட்டது. பல நாடுகள் தங்கள் சுகாதார பராமரிப்புக் கட்டமைப்பில் அதனை இணைத்துக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். பரவா நோய்கள், வாழ்க்கைமுறைக் கோளாறுகள், நாட்பட்ட நோய்கள், பலவகை மருந்தெதிர்ப்பு நோய்கள், பெருகிவரும் புதிய நோய்கள் போன்றவற்றால் மருத்துவத் துறைக்கு எழுந்துள்ள சவாலான சூழ்நிலையில் ஆயுர்வேதம், ஓமியோபதி, சித்தா, யுனானி ஆகிய மருத்துவ முறைகளில் அடங்கியுள்ள கொள்கைகளையும் நடைமுறைகளையும் புரிந்துகொள்ளும் பேரார்வம் எழுந்துள்ளது. உகந்த, ஒருமுனைபடுத்தப்பட்ட வகையில் இம்முறைகளை மேம்படுத்த 1995-ல் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறையில் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி பிரிவு உருவாக்கப்பட்டது. இத்துறைக்கு 2003-ஆம் ஆண்டு ஆயுஷ் என்று மறுபெயர் சூட்டப்பட்டது.
இந்தியாவின் வளமான மருத்துவ ஞானம் வேதங்களில் இருந்து கிடைத்தது. இதுவே ஆயுர்வேதம் என்று நிலைத்தது. சித்த முறையாலும் யோகா பயிற்சியாலும் இது மேலும் ஞானிகளால் (ரிஷிகள்) வளமாக்கப்பட்டது. இவையே இந்த நாட்டின் மருத்துவ நடைமுறையாகப் பல நூற்றாண்டுகள் இருந்து இந்திய பண்பாடு மற்றும் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக அமைந்தது. ஹிப்போகிரேட்சின் காலத்தில் இருந்து அறியப்பட்ட யுனானி திப் கி.பி.எட்டாம் நூற்றாண்டில் இந்தியாவுக்குள் வந்தது. பின்னர் உயிர்மருந்தியல் கருத்துருவை அடிப்படையாகக் கொண்ட அலோபதி என்று அழைக்கப்படும் மேற்கத்திய மருத்துவ முறை இந்தியாவுக்குள் வந்து இந்திய மருத்துவ முறைக்குள் உட்கிரகிக்கப்பட்டது. 18-ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில் வளர்த்தெடுக்கப்பட்ட ஓமியோபதி முறை விரைவாக செல்வாக்குப் பெற்று, தனது மருத்துவத் தத்துவத்திலும் கொள்கையிலும் கொண்டிருந்த முழுமையான அணுகுமுறையில் இருந்த ஒப்புமை காரணமாக மரபான இந்திய மருத்துவ நடைமுறைகளோடு ஒன்று கலந்தது. அனைத்து கலாச்சாரங்களுக்கும் உரியதான ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்ட மருந்திலா முறையான இயற்கை மருத்துவம் அமைப்பு ரீதியாக ஒழுங்குபெற்று நாட்டின் பல மருத்துவ முறையின் ஒரு பகுதியாக மாறியது. இவ்வாறு உயிர் மருந்து (அலோபதி) முறையோடு மரபுவழி நடைமுறைகளும் இணைந்து ஒரு தனித்தன்மை வாய்ந்த மருத்துவ முன்னுதாரணம் உருவாயிற்று. சுதந்திரத்துக்குப் பின் எல்லா முறைகளின் வளர்ச்சிக்கும் அரசாங்கம் உதவியது. இதனால் மக்களுக்குத் தங்கள் அன்றாடக மருத்துவ தேவைகளைத் தேர்ந்து எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆகவே, இம்முறைகளின் குணப்படுத்தல், தடுத்தல், உடல்நலத்தை ஊக்குவித்தல் ஆகிய இயல்புகளை விரிவாக்கிப் பலப்படுத்த பொதுமக்கள் மற்றும் நிறுவனங்களின் ஆதரவும் கிடைத்தது.
சோதனைமுறை கருத்தாக்கங்களை அடிபடையாகக் கொண்ட உயிர்மருந்து முறை (அலோபதி) தொடர்ந்த ஆய்வுகளினாலும் அறிவை மேம்படுத்தி வந்ததினாலும் புதிய கண்டுபிடிப்புகளைக் கொண்டு வந்தது. இதனால் நோயின் காரணங்கள், போக்குகள், முன்கண்டறிதல், கண்டறிதல், மேலாண்மை ஆகியவற்றைக் குறித்த குறிப்பிடத்தக்க தகவல்கள் கிடைத்தன. அதிகமான மரணங்களுக்குக் காரணமாக இருந்த தொற்று நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டன. ஆபத்தான நிலைகளைச் சமாளித்தல், அறுவை மருத்துவம் போன்றவை மருத்துவ துறையில் அற்புதங்களைக் கொண்டு வந்தன. ஆயினும் பரவா நோய்கள் அதிகரித்தன. அனுபவ மருந்துகளான ஆயுஷ் மருந்துகள் மலிவாகவும் பாதுகாப்பானவைகளாகவும் காலத்தால் சோதிக்கப்பட்டவைகளாகவும் இருந்தன. இதை விட்டால் வேறு மருந்து இல்லை என்ற நிலையிலும் அல்லது நீண்ட கால நோய்களுக்கு உயிர் மருந்துகளோடு இணைத்தும் ஆயுஷ் மருந்துகள் பரவலாகப் பயன்படுத்தப் பட்டன. ஆரோக்கியத்தைக் குறித்த நோக்குநிலை இவ்வாறு மாற்றம் பெற்றதால் ஆயுஷின் தேவை அதிகமாக உணரப்பட்டது. இவ்வுண்மையைக் கருத்தில் கொண்டு சுகாதாரப் பராமரிப்பில் அரசு பலவகை மருத்துவத் துறைகளை ஆதரித்தது. தமக்குரிய வலிமையோடு ஒவ்வொரு மருத்துவ முறையும் வளர அனுமதிக்கப்பட்டது.