பிளேக்

பிளேக் ஒரு தொற்று நோய். யெர்சினியா பெஸ்ட்டிஸ் என்ற நுண்ணியிரியினால் இது உண்டாகிறது. மனிதன் அறிந்த மிகப் பழமையான நோய்களில் இதுவும் ஒன்று. வெப்ப மண்டலம், அதன் சார்  பகுதிகள் மற்றும் மித வெப்ப நாடுகளில் இது இன்றும் ஏற்படுகிறது. இக் கொள்ளை நோய், ஏற்கெனவே தாக்கிய இடங்களில், நீண்ட அமைதிக்குப் பின் மீண்டும் தாக்கக் கூடும்.

பிளேக், விலங்குகளால் பரவும் நோய் (முதுகெலும்பு விலங்கில் இருந்து மனிதனுக்கு). முதலில் காட்டுக் கொறித்துண்ணிகளுக்கு ஏற்பட்டு உடனடியாக மனிதர்களுக்குப் பரவுகிறது. ஒரு கொறித்துண்ணியிடம் இருந்து தெள்ளு (புற ஒட்டுண்ணி) மூலம் இன்னொன்றுக்குப் பரவுகிறது. பின், தொற்று ஏற்பட்டுள்ள தெள்ளு கடிப்பதாலும் நேரடித் தொடர்பாலும், உள்மூச்சு மற்றும் அரிதாகத்,  தொற்றுள்ள ஓம்புண்ணியின் தொற்றுப்பொருட்கள் உட்புகுதல் ஆகியவற்றாலும் மனிதருக்குப் பரவுகிறது.

கடந்த காலங்களில் கொள்ளை நோயாகப் பிளேக் பரவி அதிக அளவில் மரணங்களும் ஏற்பட்டுள்ளன. 14-ஆம் நூற்றாண்டில் 50 மில்லியன் பேர் (5 கோடி) இதனால் இறந்தனர். எனவே கருப்பு பிளேக் என இது அழைக்கப்பட்டது. பாதி மரணங்கள் ஆசியா ஆப்பிரிக்காவிலும் மீதி ஐரோப்பாவிலும் நிகழ்ந்தது.

ஆப்பிரிக்கா, முந்தைய சோவியத் ஒன்றியம், அமெரிக்க நாடுகள் மற்றும் ஆசியாவில் பிளேக் இடம் சார்ந்து உண்டாகிறது. தொற்று பரவும் கொறித்துண்ணிகளின் வாழ்நிலங்களைப் பொறுத்து பிளேக் பரவுகிறது. ஆஸ்திரேலியாவைத் தவிர இவை அனைத்துக் கண்டங்களிலும் வாழ்கின்றன.

பிளேக் கொள்ளை நோய் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் தென் அமெரிக்காவில் ஏற்பட்டுள்ளன. ஆனால் 1990 களுக்குப் பின்னர் அதிக மனித மரணம் ஆப்பிரிக்காவிலேயே நிகழ்ந்துள்ளது. 2013-ல் உலக அளவில் 126 மரணங்கள் உட்பட 783 நேர்வுகள் அறிவிக்கப்பட்டன. உலக சுகாதார நிறுவனத்தின்படி ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் ஆசியாவில் 20 நாடுகள் பிளேக்கின் இயற்கை குவியம் என இனங்காணப்பட்டுள்ளன. மடகாஸ்கர், காங்கோ மக்கள்நாயகக் குடியரசு மற்றும் பெரு ஆகிய மூன்று நாடுகளும் அதிக முழுஆண்டுநோய்ப் பகுதிகளாக காணப்படுகின்றன. 1980-களில் இருந்து மடகாஸ்கரில் ஏறக்குறைய ஒவ்வொரு ஆண்டும் பிளேக் கொள்ளை நோயாகத் தாக்கியுள்ளது.

இந்தியாவில் மகாராஷ்ட்டிரா மாநிலத்தின் பீட் மாவட்டத்தில் உள்ள மாம்லா கிரமத்திலும் (அரையாப்புக்கட்டி வகை) குஜராத் மாநிலம் சூரத் மாவட்டத்திலும் (நிமோனியா வகை) செப்டம்பர் 1994-ல் பிளேக் நோயெழுச்சி ஏற்பட்டது.  தொடர்ந்து, தில்லி, வாரணாசி, கருநாடகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து நிமோனியா வகை பிளேக் என சந்தேகப்படும் நேர்வுகள் அறிவிக்கப்பட்டன.  876 நேர்வுகளும் 54 மரணங்களும் பதிவாகின. 2002-ல் இமாசலப் பிரதேசத்தில் நிமோனியா பிளேக்கால் 16 நேர்வுகளும் 4 மரணங்களும் ஏற்பட்டன. உத்தரகாண்ட் மாநில உத்தர் காஷியின் தன்கட் கிரமத்தில் 2004-ல் ஏற்பட்ட அரையாப்புக்கட்டி வகை பிளேக்கால் 8 நேர்வுகளும் 3 மரணங்களும் ஏற்பட்டன.

தேசிய நோய்த்தடுப்பு மையம் (NCDC) , தில்லி, இந்தியாவில் வன விலங்குகளைப் பிளேக் தாக்கும் நான்கு குவியங்களை இனங்கண்டுள்ளது. அவையாவன: தென்னிந்திய முச்சந்தி (கருநாடகம், ஆந்திரப்பிரதேசம் மற்றும் தமிழ் நாடு), மகாராஷ்ட்டிராவின் பீட் பட்டை, இமாசலப்பிரதேசத்தின் ரோருவும் உத்தரகாண்டும். தேசிய நோய்த்தடுப்பு மையம் தொடர்ந்து இப்பகுதிகளைக் கண்காணித்து வருகிறது.

பலவீனமான சுகாதார அமைப்பும் மோசமான சுற்றுப்புறச் சூழல் சுத்தமும் மனிதர்களுக்குப் பிளேக் கொள்ளை நோயாகப் பரவும் ஆபத்தை உண்டாக்குகின்றன. பல விலங்குகளால் பரவும் நோய்களில் மனிதர்களுக்குப் பிளேக்கே கடுமையான நோயாகும். சிகிச்சை அளிக்காவிட்டால் மரண விகிதம் 50-60%-மாக இருக்கும்.

குறிப்புகள்:

who.int/csr/disease/plague/madagascar-outbreak/en/

Mittal V et al,Quick control of bubonic plague outbreak in Uttar Kashi, India. J Commun Dis. 2004 Dec; 36(4):233-9, accessed from ncbi.nlm.nih.gov/pubmed/16506545

who.int/csr/resources/publications/plague/

Dikid T et al, Emerging & re-emerging infections in India: An overview, Indian J Med Res 138, July 2013, pp 19-31 asccessed from http://icmr.nic.in/ijmr/2013/july/0704.pdf

nicd.nic.in/writereaddata/linkimages/zoonotic_manual

 

இதன் நோயரும்பும் காலம் 3-7 நாட்கள். திடீர்க்காய்ச்சல், குளிர், தலை - உடல் வலி, பலவீனம், வாந்தி, குமட்டல் ஆகிய நச்சுக்காய்ச்சல் அறிகுறிகளுடன் இந்நோய் தொடங்கும்.

தொற்றின் வழியைப் பொறுத்து பிளேக் மூன்று வகைப்படும்: அரையாப்புக்கட்டி, குருதிநச்சு மற்றும் நிமோனியா வகைகள்.

 • அரையாப்புக்கட்டி பிளேக்: இதுவே மிகவும் பொதுவான வடிவம். உடலின் கீழ் நுனிப்பகுதிகளில் தொற்றுள்ள தெள்ளு கடிப்பதால் உண்டாகிறது. பிளேக் பாக்டீரியா (ஒய்.பெஸ்ட்டிஸ்) கடிவாய் வழியாக நுழைந்து நிணநீர் மண்டலத்தில் பயணம் செய்து அருகில் உள்ள நிணநீர்ச் சுரப்பியில் பல்கிப்பெருகுகிறது. இதனால் நிணநீர்ச்சுரப்பி அழற்சியுற்று, இறுகி, வீங்கி வலியுடன் காணப்படும். இது அரையாப்புக்கட்டி எனப்படும். பொதுவாக அரையில் ஏற்படும். அக்குளிலும் கழுத்திலும் கூட உருவாகும். தொற்று முற்றும் போது வீங்கிய நிணநீர் முடிச்சுகள் சீழ்வடியும் திறந்தப் புண்களாக மாறலாம். இவ்வகை, ஒருவரில் இருந்து இன்னொருவருக்குப் பரவாது.

 • குருதி நச்சு பிளேக்: நிணநீர் முடிச்சுக் கட்டி உருவாகாமல் நேரடியாகத் தொற்று இரத்த ஓட்டத்தில் பரவும்போது இவ்வகை உருவாகிறது. தெள்ளு கடிப்பதாலும், தொற்றுப்பொருட்கள் தோல் வெடிப்புகள் மூலம் நுழைவதாலும் இது ஏற்படும். கட்டி வகை முற்றும் போதும் ஒய்.பெஸ்ட்டிஸ்  இரத்தத்தில் கலக்கும்.

 • நிமோனியா பிளேக் அல்லது நுரையீரல் அடிப்படை பிளேக்: இது அரிய வடிவம். கட்டி வடிவம் முற்றித், தொற்று நுரையீரலைப் பாதிக்கிறது. இது மிகவும் பரவும் வகை. காற்றில் பரவும் தொற்றுத் துளிகள் அல்லது தொற்றுள்ள துணிகள் அல்லது வேறு பொருட்கள் மூலம் பரவும். சிகிச்சை அளிக்காவிட்டால் இவ்வகை அதிக இறப்பு விகிதம் கொண்டதாகும்.

குறிப்பு:

who.int/mediacentre/factsheets/

 

யெர்சினியா பெஸ்ட்டிசால் பிளேக் உண்டாகிறது (நகர்ச்சியற்ற, அமில எதிர்ப்பற்ற, வித்துருவாக்காத, கிராம்-எதிர்மறை கோகோ-பாக்டீரியா). சூரிய ஒளி, அதிக வெப்பம், கிருமி நாசினிகளால் ஒய்.பெஸ்ட்டிஸ் எளிதில் அழியும்.

பிளேக் நோய் பரப்பிகள்: உலகில் தெள்ளே பிளேக்கின் இயற்கை நோய் பரப்பி. இந்தியாவில் செனோப்சைலா சியோபிஸ், எக்ஸ்-ஆஸ்டியா மற்றும் எக்ஸ்-பிரசிலியென்சிஸ் ஆகியவையே முக்கியத் தெள்ளுகள். இவற்றில் செனோப்சைலா சியோபிசே முதன்மையான நோய்பரப்பி.

தொற்று மூலம் – ஒய்.பெஸ்டிசின் இயற்கை ஓம்புயிரி காட்டு கொறித்துண்ணிகளே. மிதவெப்ப மற்றும் வெப்ப மண்டல மலைகள், நிலப்பரப்புகள், பாலைவனங்கள், விளைநிலங்கள் மற்றும் காடுகளில் வாழும் குறைந்தபட்சம் 220 வகையான கொறித்துண்ணிகள் பிளேக் பாக்டீரியா தொற்றைப் பெறுவதாக அறியப்பட்டுள்ளது. வன கொறித்துண்ணிகளில் தாத்தேரா இண்டிகா மற்றும் கூடிவாழ்பவைகளில் ரேட்டஸ் நார்வெஜிகஸ் மற்றும் ஆர்.ரேட்டஸ் ஆகியவை ஒய்.பெஸ்ட்டிசின் தொற்று மூலங்களாகத் திகழ்கின்றன. இந்தியாவில் வீட்டெலியை (R.rattus) விட காட்டெலிகளே (Tatera indica) முக்கிய தொற்று ஆதாரம். பொதுவாக, காட்டு கொறிப்புண்ணிகளில் எதிர்ப்புசக்தி உடையவைகளாலேயே தொற்று எடுத்துச்செல்லப் படுகிறது. எதிர்ப்பு சக்தியற்றவை நோயால் இறந்து படுகின்றன.

பரவல் விதம்:

தெள்ளு கடி – பொதுவாக தொற்றுள்ள தெள்ளின் கடியாலேயே பிளேக் பாக்டீரியா பரவுகிறது. விலங்குகளிடையே பிளேக் பரவும்போது பல கொறித்துண்ணிகள் இறக்கின்றன. எனவே இரத்தம் தேடி தெள்ளுகள் அலைகின்றன. சமீபத்தில் பிளேக்கால் கொறித்துண்ணிகள் இறந்த இடத்துக்குச் செல்லும் விலங்குகளும் மனிதர்களும் தெள்ளுகளால் கடிக்கப்படலாம். நாய்களும் பூனைகளும் தெள்ளுகளை வீட்டுக்குள் கொண்டு வரலாம். தெள்ளு கடியால் அரையாப்புக்கட்டி வகை அல்லது குருதிநச்சு வகை ஏற்படுகின்றன.

தொற்றுள்ள பாய்மம் அல்லது திசுத் தொடர்பு: வேட்டைக்காரர் போன்றோர் தகுந்த பாதுகாப்பின்றி பிளேக் பாதிப்புள்ள விலங்குகளின் திசு அல்லது உடல் பாய்மத்தைக் கையாளும்போது மனிதர்களுக்குத் தொற்று ஏற்படுகிறது. இவ்வாறு அரையாப்புக்கட்டி வகை அல்லது குருதிநச்சு வகை ஏற்படுகின்றன.

தொற்றுள்ள துளிகள்: நிமோனியா பிளேக்கால் பாதிக்கப்பட்டவரின் சுவாசத் துளிகள் பிறருக்குத் தொற்றை உண்டாக்கலாம். பாதிக்கப்பட்டப் பூனைகளும் இவ்வழியில் மனிதருக்கு தொற்றைப் பரப்பலாம்.

குறிப்புகள்:

cdc.gov/plague/transmission/index.html

who.int/csr/resources/publications/plague/CSR

nicd.nic.in/writereaddata/linkimages/zoonotic

பிளேக் என்று சந்தேகப்பட்டால் மருத்துவ மாதிரிகள் உடனடியாக சேகரிக்கபட்டு குறிப்பான நுண்ணுயிரி சிகிச்சை தொடங்கப்பட வேண்டும். ஆய்வகக் கண்டறிதலுக்காகக் காத்திருக்கக் கூடாது. ஒற்று மற்றும் திசுவளர்ச்சி சோதனைக்கான வழக்கமான கண்டறியும் மாதிரிகளில் அடங்குவன: இரத்தம், சந்தேகப்படும் கட்டி மாதிரிகள், தொண்டை ஒற்று, சளி, மூச்சுக்குழல் மாதிரிகள் (பிளேக் தொண்டையழற்சி அல்லது நிமோனியா நோயாளி என சந்தேகப்படுபவரிடம் இருந்து) மற்றும் மூளைத் தண்டுவடப் பாய்மம் (மூளைக்காய்ச்சல் என சந்தேகப் படுபவர்களிடம் இருந்து).

ஒற்றுப் பரிசோதனை- நோயெழுச்சியின் போதும் விலங்குகளுக்கிடையில் நோய் பரவும் போதும், ஒற்று பரிசோதனை (வேய்சன் கறையால் சாயமேற்றப்பட்டது) காட்டும் சாயமேறிய பிளேக் கிருமிகள் அடிப்படை நோய்கண்டறிதலுக்கு உதவும். ஒற்று ஒளிர்-எதிர்பொருள் சோதனையால் சாயமேற்றப்பட வேண்டும்.

திசு வளர்ச்சி: சேகரிக்கப்பட்ட மாதிரிகள் கேரி-பிளேயர் ஊடகத்தில் ஆய்வகத்துக்கு எடுத்துசெல்லப்பட்டு உயிரியல் ஊடகத்தில் திசு வளர்ச்சி செய்யப்பட வேண்டும். பேக்டீரியோ லைசிஸ் சோதனையால் கிருமி உறுதி செய்யப்படும்.

ஊனீரியல் – ஏற்கெனவே தடுப்பூசி இடப்படாத ஒருவருக்கு பிளேக் எதிர்பொருளின் ஒற்றை (single) அதிக முறிமதிப்பு இருப்பது பிளேக் இருப்பதற்கான சாத்தியக் கூறைக் காட்டும். 10 நாட்கள் இடைவிட்டு சேகரிக்கப்பட்ட இரு ஊனிர் மாதிரிகளில் 4 மடங்கு எதிர்பொருள் அதிகரிப்பு இருப்பது பிளேக்கை உறுதிப்படுத்தும்.

பிற சோதனைகள் -  தெரிவுசெய்யப்பட்ட யெசினியா பெஸ்ட்டிஸ் மரபணுக்களைக் கண்டறிய பாலிமரேஸ் தொடர் வினை, எலிசாவை (ELISA) அடிப்படையாகக் கொண்ட துரித ஊனீர் சோதனைகள், விலங்கு தடுப்பூசி.

மனித பிளேக்குக்கு ஆய்வகக் கண்டறிதல் வகைகள் பின்வருமாறு:

நேர்வு வரயறை:

பிளேக் ஐயுறவு:

 • ஒத்தியங்கும் மருத்துவ மற்றும் கொள்ளைநோயியல் அம்சங்கள்; மற்றும்

 • மருத்துவ மாதிரிகளில் காணப்படும் அல்லது அவற்றில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஐயத்திற்குரிய உயிரிகள்

உய்த்தறியும் பிளேக்:

 • நேரடி ஒளிர் எதிர்பொருள் சோதனை அல்லது பிற தரமான விளைவியக் கண்டறிதல் முறை மூலம் மருத்துவப் பொருட்களில் இருந்து கண்டறியப்பட்ட ஒய்.பெஸ்ட்டிஸ் F1 விளைவியம், அல்லது

 • மருத்துவ மாதிரியில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஒன்று (isolate), ஒய்.பெஸ்ட்டிசின் உயிர்வேதியல் மறுவினைகளோடு அல்லது பாலிமரேஸ் தொடர் வினையோடு நேர்மறையாக ஒத்திருத்தல்; அல்லது

 • பழைய தொற்று அல்லது தடுப்பூசியின் அடிப்படையில் விவரிக்க முடியாத ஒய்.பெஸ்ட்டிஸ் F1 விளைவியத்தின் கண்டறிதல் அளவுக்கு நேர்மறையாகக் காணப்படும் ஓர் ஒற்றை ஊனீர் மாதிரி.

உறுதிசெய்யப்பட்ட பிளேக்:

 • திசுவளர்ச்சி சோதனை பாக்டீரிய சுவர் உடைப்பில் ஒய்.பெஸ்ட்டிஸ் தனிப்பொருள் இனம்காணப்பட்டால்; அல்லது

 • இணை ஊனீர் மாதிரிகளில் F1 விளைவியத்துக்கு எதிரான எதிர்பொருள் முறிமதிப்பில் குறிப்பிட்ட அளவு (4 மடங்கு அல்லது அதிக) மாற்றம்.

தொற்றின் சூழல்- கொள்ளைநோயியலைக் கண்டறியப் பிரேதப் பரிசோதனை மாதிரிகள், கொறித்துண்ணிகளின் திசு மாதிரிகள், தெள்ளு மாதிரிகள் மற்றும் மண் மாதிரிகள் பயன்படுத்தப்படும்.

குறிப்புகள்:

nicd.nic.in/writereaddata/linkimages/zoonotic

cdc.gov/plague/diagnosis/

இந்நோய் உயிருக்கு ஆபத்தானதால் சிறந்த நோய்க்கணிப்பிற்கு ஆரம்பத்தில் கண்டறிதலும் மருத்துவமும் இன்றியமையாதவை. மருத்துவ மற்றும் கொள்ளை நோயியல் அடிப்படையில் மனித பிளேக் என்று சந்தேகப்பட்ட உடன்  அதை உறுதிப்படுத்த தகுந்த மாதிரிகள் சேகரிக்கப்பட வேண்டும்.

ஆய்வு அறிக்கைகளுக்காகக் காத்திருக்காமல் நோயாளிக்கு குறிப்பான எதிர்நுண்ணுயிரி சிகிச்சைகள் அளிக்கத் தொடங்க வேண்டும்.

சந்தேகத்திற்குரிய பிளேக் நோயாளிகளுக்கு நிமோனியாவுக்கான சான்றுகள் இருந்தால் தனிமைப் படுத்தி மூச்சுத் துளி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்,

குறிப்பு:

who.int/csr/resources/publications/plague/

மனித பிளேக் பரவல் தடுப்பும் கட்டுப்பாடும்:

மனித பிளேக் பரவல் தடுப்பும் கட்டுப்பாடும் ஒரு பல்துறை அணுகுமுறை. விலங்குகளிடம் பிளேக் நோய் பரவுவதை முறையாகக் கண்காணித்து நோய் விலங்குகளிடம் பரவினால் தகவலை அவ்வப்பகுதி மக்களுக்கு அறிவிப்பது தடுப்பு நடவடிக்கைகளில் அடங்கும்.

இந்தியாவில், தேசிய நோய்க்கட்டுப்பாட்டு மையத்தின் விலங்குநோய்ப் பிரிவின் பிளேக் ஆய்வகம், தில்லி, அதன் பெங்களூரு (கருநாடகம்) பிளேக் கண்காணிப்பு அலகு, ஆகியவை, பல கட்டுப்பாட்டு நடவடிக்கைகளையும் கொறித்துண்ணிகள் மற்றும் எலித் தெள்ளுகளில் நுண்ணுயிரியல் மற்றும் ஊனியரியல் கண்காணிப்பையும் செய்து வருகின்றன.  இந்திய அரசின் ஒருங்கிணைந்த நோய்க்கண்காணிப்புத் திட்டம், மனிதர்களில் கண்காணிப்பு நடவடிக்கைகளை நோயெழுச்சி ஆபத்து அறிவிப்பு மற்றும் வாராந்தரக் கண்காணிப்பு அறிவிப்பு முறைமைகளின் மூலம் நிர்வாகித்து வருகிறது.

அவ்வப்பகுதி மக்களுக்குக் கீழ்வருவன பற்றிய தகவல்களை வழங்க வேண்டும்:

 • தெள்ளு கடிக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கை.

 • பிளேக் பகுதிகளில் விலங்கு சடலங்களைக் கையாளாமை.

 • தொற்றுள்ள சீழ்க்கட்டி போன்ற திசுக்களை நேரடியாகத் தொடாமை.

 • நிமோனியா பிளேக் நோயாளிகளுக்கு நேர்படாமை.

 • குறிப்பிட்டப் பகுதியில் நோயெழுச்சி ஏற்பட பலவித சமூகக்-கொள்ளைநோயியல் காரணிகள்.

அவ்வப்பகுதி மருத்துவர்களும் பிற சுகாதாரப் பராமரிப்புப் பணியாளர்களும் பிளேக்கின் அறிகுறிகள் பற்றி வெவ்வேறுநிலை நோய்கண்டறிதலின் அடிப்படையில் நன்கு அறிந்து வைத்திருக்க வேண்டும்.

பிளேக் சந்தேகம் ஏற்பட்டால் ஆய்வக உறுதிசெய்தலுக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட வேண்டும். உறுதிசெய்வதற்காகக் காத்திராமல் சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும்.

வேறு நேர்வுகள் இருக்கின்றனவா அல்லது அதே பகுதியில் நிகழ்ந்துள்ளதா என்பதை அறிவதற்காகத் தீவிரக் கண்காணிப்பைத் தொடங்க வேண்டும். காற்றில் பரவும் துளிகள் மூலம் நேரடியாக மனிதருக்கு மனிதர் பரவும் நிமோனியா பிளேக் நேர்வைப் பற்றிய உடனடி அறிவிப்பு முக்கியமானது.

அறிவிக்கை:  உலக சுகாதார நிறுவன உறுப்பு நாடுகள் உலக சுகாதார ஒழுங்குமுறைகளின் படி அவையவற்றின் பகுதிகளில் ஏற்படும் பிளேக் பற்றிய அறிவிக்கையை வெளியிட வேண்டும்.

தெள்ளைக் கட்டுப்படுத்தல்: தகுந்த முறையில் ஒரு பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தி எலித் தெள்ளுகளை அழிப்பதே நோய்ப் பரவல் தொடரை உடைக்கும் மிகவும் பலன் தரும் முறையாகும்.

கொறித்துண்ணிகளைக் கட்டுப்படுத்தல்: மனிதக் குடியிருப்புகளிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் சுத்தத்தை மேம்படுத்துவதன் மூலம் கொறித்துண்ணிகளைக் கட்டுப்படுத்தும் நீண்ட கால நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மருந்தியல் நோய்தடுப்பு: முன் ஆறு நாட்களுக்குள் நேர்தலுக்கு ஆளான பின் வரும் நபர்களுக்கு நேர்தலுக்குப் பின்னான நோய்தடுப்பு சிகிச்சையாக நுண்ணுயிர்க்கொல்லிகள் அளிக்கலாம்.

 • நிமோனியா பிளேக் நோயாளிகளுடன் நெருக்கமான தொடர்பு.

 • ஒய்.பெஸ்ட்டிஸ் தொற்றுள்ள தெள்ளால் கடிபட்டதாக சந்தேகப்படும் நபர்கள்.

 • ஒய்.பெஸ்ட்டிஸ் தொற்றுள்ள பாலூட்டியின் உடல் பாய்மம் அல்லது திசுக்களுடன் நேரடித் தொடர்பு.

 • அறியப்பட்ட தொற்றுப் பொருட்களுடன் ஓர் ஆய்வக விபத்தில் தொடர்பு கொண்டவர்.

தடுப்பூசி:

மனிதப் பயன்பாட்டுக்கு ஒரு பிளேக் தடுப்பூசி உள்ளது. ஆனால் அது பொதுமக்களுக்குப் பரவலாகவோ அல்லது தொற்று ஆபத்து இருக்கலாம் என்று சந்தேகப்படுபவர்களுக்கோ பரிந்துரைக்கப் படுவதில்லை. எனவே, வழக்கமாக ஒய்.பெஸ்ட்டிஸ் கிருமியுடன் நேரடித் தொடர்புள்ள பிளேக் சோதனை மற்றும் ஆராய்ச்சி ஆய்வக வல்லுநர் மற்றும் தொற்றுள்ள கொறித்துண்ணிகள் வாழிடங்களை ஆய்வோர் ஆகியோருக்கே குறிப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது.

குறிப்புகள்:

who.int/csr/resources/publications/plague/

who.int/mediacentre/factsheets/fs267/en/

nicd.ac.za/assets/files/National_Plague

 • PUBLISHED DATE : Jun 24, 2016
 • PUBLISHED BY : Zahid
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Jun 24, 2016

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.