ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி (AKC)

பொதுவாக அரியதும், குருடாக்கும் ஆற்றல் கொண்டதுமான ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி, குறிப்பாக, ஒவ்வாமைத் தோலழற்சி கொண்ட இளம்வயதினரைப் பாதிக்கிறது. வெண்படலத்தைத் தாக்கும் நீடித்த அழற்சி நோயான இது பார்வை செயல்பாட்டில் பெரும் விளைவுகளை உண்டாக்கும்.

குழந்தைகள் மத்தியில் இது அதிகமாக உள்ளது. இதனோடு தொடர்புடைய தோலழற்சி அல்லது ஒவ்வாமை நிலைகள் ஏற்பட்ட பின் இந்நோய் உருவாகலாம். மற்றும் இநத நிலைகள் அதிகரித்துச் செல்வதோடு இநோய்க்கு தொடர்பு இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. பொதுவாக இந்நோயின் அறிகுறிகள் ஒருவரின் வாழ்க்கையில் இரண்டாம் பத்தாண்டில் இருந்து மூன்றாம் பத்தாண்டுகள் வரை ஏற்படுகின்றன. சில நோயாளிக்கு விரைவாகவும் சிலருக்கு பின்னரும் உண்டாகலாம்   (பின்னிளமைப் பருவத்தில் இருந்து 50 வயதுவரை; உச்சகட்டமாக 30-50 வயது). பார்வை சம்பந்தப்பட்ட சிக்கல்கள் பெரும்பாலும் நான்கு அல்லது ஐந்தாம் பத்தாண்டுகளில் உருவாகும். பெண்களை விட ஆண்களே அதிகமாகப் பாதிக்கப் படுகின்றனர்.  இதன் பின் இது பல ஆண்டுகள் நீடிக்கும். பொதுவாக வாழ்க்கை முழுவதும் சிகிச்சை தேவைப்படலாம். கண்ணீர்ப்படலக் கோளாறுகளும் விழிப்பரப்புச் சிதைவும் இந்நோயின் பெரும் ஆபத்துகளாகும். பக்கக் கழுத்து மடிப்புகள், முழங்கையின் முன் பகுதி, முழங்கால் மூட்டின் பின் பகுதி ஆகியவைகளே ஒவ்வாமை தோலழற்சி பொதுவாக பாதிக்கும் இடங்கள். இருப்பினும் இமைகள் உள்ளடங்கிய உடலின் பிற பகுதிகளிலும் பாதிப்பு ஏற்படலாம்.

ஒவ்வாமைத் தோல் அழற்சி கொண்ட நோயாளிகளுக்கு இருபக்க வெண்படல அழற்சி ஏற்படுவதை 1952-ல் ஹோகன் விளக்கினார் (ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி என்ற சொல்லைஉருவாக்கினார்). தோல் அழற்சி அதிகரிக்கும் போது இந்நோயும் அதிகரிப்பது கண்டறியப்பட்டது. நீடித்த கண்சவ்வுக் குருதிமிகைப்பும் தடிப்பும், வெண்படல மேற்தோல்நோய் மற்றும் வெண்படல வடுவும் குருதிக்குழல் மிகைப்பும் நோயாளிகளுக்குக் காணப்பட்டது. சில நோயாளிகளுக்குத் தோல் அழற்சி இல்லாமலும் ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி ஏற்படலாம். சொறித் தோல் அழற்சி தொடர்ந்து இருத்தல், ஒவ்வாமை நோயும் தொடர்புடைய ஒவ்வாமைகளும் (ஆஸ்துமா, புதர்க் காய்ச்சல்), ஈசினோபிலியா மற்றும் கண்சவ்வழற்சியும் தோல் அழற்சி மிகுதலும் குடும்பத்தில் தொடர்ந்து வருதல் ஆகியவையே இந்நோயைக் கண்டறிய ஹோகன் அளிக்கும் விதிகள் ஆகும். நோயாளிகளுக்கு நீடித்த கண்சவ்வுக் குருதிமிகைப்பும் தடிப்பும், வெண்படல மேற்தோல்நோய் மற்றும் வெண்படல வடுவும் குருதிக்குழல் மிகைப்பும் இருப்பதைக் கண்டறிந்தார்.

நீடித்த கண்சவ்வழற்சியுடன் (CAC) பருவகல ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி  (SAC), நிரந்தர ஒவ்வாமை கண்சவ்வழற்சி (PAC), இளவேனில் கருவிழிகண்சவ்வழற்சி (VKC) மற்றும் குறிப்பிட்ட அளவிற்கு மாபெரும் காம்புக் கண்சவ்வழற்சி (GPC) ஆகியவற்றின் கீழ் ஒரு நோயை ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி பிரதிநிதித்துவப் படுத்துகிறது. அழற்சியின் கடுமையாலும் நீடித்தத் தன்மையாலும் நீடித்த ஒவ்வாமை கண்சவ்வழற்சியில் வெண்படலப் பாதிப்புக்கும் ஒளிபுகாநிலை ஏற்படுவதற்கும் சாத்தியக் கூறுகள் உள்ளன. பருவகால மற்றும் நிரந்தரக் கண்சவ்வழற்சியில், மிதமான கண்சவ்வழற்சியும் வெண்படலப் பாதிப்பு அரிதாகவும் காணப்படும். இருப்பினும் ஒவ்வாமைக் கண்சவ்வழற்சியின் மருத்துவ மற்றும் நோய்-உடலியல் அம்சங்கள் பிற ஒவ்வாமைக் கண்சவ்வழற்சியில் இருந்து முற்றிலும் வேறுபடும். இளவேனில் கண்சவ்வழற்சியைப் போன்றே ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி ஒரு கடுமையான அழற்சி நோய் ஆகும். இதில் வெண்படலம் பாதிக்கப்பட்டு நிரந்தரப் பார்வைக் கோளாறு ஏற்படலாம். ஆகவே, மிகவும் நீடித்த இக் கோளாறுகளின் அதிக பட்சமான  பார்வை இழப்பு ஒவ்வாமைக் கண்சவ்வழற்சியில் ஏற்படுகிறது.

இம்யுனோகுளோபுலின் E (IgE)-யினால் செயலூக்கம் பெறும், வகை I மிகையுணர்திறன் பதில்வினை ஒன்றை இயல்பாக நீடித்த ஒவ்வாமை கண்சவ்வழற்சி உள்ளடக்கியுள்ளது. இது காம்புக் கண்சவ்வழற்சியாக வெளிப்படும். இதன் பொதுவான ஓர் ஆரம்ப அறிகுறி அரிப்பாகும். வகை I- றோடு தொடர்புடைய மிகைஉணர்திறன் பதில்வினைகளும், T-செல் செயலூக்கம் பெற்ற ஒரு முக்கிய வகை IV பதில்வினையும், அவற்றோடு பலவகையான அழற்சி செல்களும் சைட்டோகைன்களும் ஒவ்வாமைக் கண்ணழற்சியில் கண்சவ்விலும் வெண்படலத்திம் காணப்படும் அழற்சி மாற்றங்களுக்கு வித்திடுகின்றன.

AKC மற்றும் VKC யில் முறையே சொறியும் ஆஸ்துமாவும் காணப்படும்.  SAC மற்றும் PAC யில் பெரும்பாலும் நாசியழற்சி இருக்கும்.

AKC நீடித்தும் தொடர்ந்தும் இருக்கும். தானாகக் குணமடைய சாத்தியக் கூறுகள் குறைவே. கண்ணோய்களுடன் தொடர்புடையதாகக் காணப்படும். VKC பெரும்பாலும் பருவநிலை சார்ந்ததே. இளவேனிற் காலத்தில் கடுமையாக இருக்கும். AKC  நிரந்தரமாக நிலைக்கும் இயல்புகளைக் காட்டும். குளிர்காலத்தில் பெரும்பாலும் மோசமாகும். காற்றில் பரவும் சூழல் ஒவ்வாமைக் காரணிகளால் நோயாளிகள் பெரும்பாலும் பாதிப்படைவர்.

குறிப்புகள்:

Agarwal Sunita, Agarwal Athiya, Apple David J, Buratto Lucio, Alio Jorge L, Pandey Suresh K and Agarwal Amar.Textbook of Ophthalmology Volume 1.First Edition. Jaypee Brothers Medical Publishers (P) Ltd.  2002. New Delhi. P. 844-847.

Saxena S, Clinical Ophthalmology: Medical and Surgical Approach, 2nd ed. Jaypee-Highlights, 2011, New Delhi.  

Basak Samar K, Atlas of Clinical Ophthalmology, 2nd ed. Jaypee Brothers Medical Publishers (P) Ltd, 2013, New Delhi, P. 55.

http://www.ejournalofophthalmology.com/ejo/ejo54.html

http://emedicine.medscape.com/article/1194480-overview

http://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1398-9995.2004.00570.x/epdf

http://eyewiki.org/Allergic_conjunctivitis

Holland Edward J, Mannis Mark J, Lee W Barry. Ocular Surface Disease - Cornea, Conjunctiva and Tear Film. Elsevier Saunders. 2013. P. 103-110.

Bowling Brad, Kanski'sClinical Ophthalmology- A Systematic Approach. Eighth Edition. Elsevier, 2016.P. 148-151.

Hogan MJ, Atopic Keratoconjunctivitis. Trans Am Ophthalmol Soc 1952; 50: 265-81.

SAC-யைப் போல் அல்லாமல்  AKC-யின் அறிகுறிகள் ஆண்டு முழுவதும் காணப்படும். இருந்தாலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ள நோயாளிகளுக்கு பருவகாலத்தைப் பொறுத்து நோய் அதிகரிக்கும்.

AKC-யின் கண்சார் அறிகுறிகள்:

-    மிதமானதில் இருந்து கடுமையான அரிப்பு

-    கண்ணீர் வடிதல்

-    உறுத்தல்

-    எரிச்சல்

-    இமை மற்றும் விழிக்கோளச் சுற்றுத் தோல் அழற்சி

-    விழிக்கோளச் சுற்று மிகை நிறமி

-    நீடித்த இமை வீக்கமும் அழற்சியும்

-    இமையுட்பிறட்சி

-    மேல் இமை தொங்குதல்

-    குறை இமை மூடல்

-    இமைமயிர் இழப்பு

-    கண் சிவப்பு

-    துர்நாற்றமான சளிக் கசிவு

-    கண்விழிக்கும் போது கண்ணைத் திறப்பதில் சிரமம்

-    கண்களில் உபாதை

-    ஒளிக்கூச்சம்

-    வலி

-    பார்வை மங்குதல்

ஒவ்வாமைக் கண்சவ்வழற்சி ஒரு நீடித்த ஒவ்வாமைக் கண் சவ்வு அழற்சி ஆகும். இதன் காரணங்கள்:

மிகையுணர்திறன் பதில்வினை:

ஒரு மிகையுணர்திறன் பதில்வினை அனைத்துக் கண் ஒவ்வாமைக் கோளாறுகளின் இயல்பாகும். பொதுவாக ஒரு தூண்டும் விளைவியத்தின் பாதிப்புக்கு, இயல்பான நோய்த்தடுப்பு மண்டலத்தின் அதிகப்படியான பதில்வினையே இது என வரையறுக்கப்படுகிறது.

வகை  I மிகையுணர்திறன், அல்லது IgE-யால் செயலூக்கம் பெற்ற மிகையுணர்திறன் PAC மற்றும் SAC-யில் மேலோங்கி நிற்கும்; ஆனால் அது AKC  உட்பட பிற CAC களிலும் பங்கு வகிக்கிறது. ஊனீர் IgE அளவுகள் AKC நோயாளிகளில் நீடித்து மிகையாக இருக்கும். ஆனால் அதன் அளவுக்கும் நோய்க் கடுமைக்கும் இடையில் தொடர்பு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. AKC கண்ணீர் மாதிரிகளிலும் IgE அளவுகள் மிகையாக இருக்கும்; இவை ஊனீர் IgE அளவுகளோடு தொடர்பு உடையதாக இருக்கும்.

AKC யால் விழிப் பரப்பு ஒரு கூடுதல் பாதிப்புக்கு உள்ளாகிறது. இது ஒரு வகை  IV தாமதப்பட்ட மிகையுணர்திறன் பதில்வினை ஆகும். இதற்கான உடனடி விளைவியத்தை எளிதாகக் கண்டறிய முடியாது.

மரபியல் முன்னிணக்கம்:

AKC க்கும் அதன் தொடர்பு நோயான ஒவ்வாமை தோல் அழற்சிக்கும் ஒரு மரபியல் முன்னிணக்கமும் அதனோடு இணைந்த விளைவிய உணர்திறனாக்கமும் சந்தேகிக்கப்படுகிறது. எனினும், பல இயல்பற்ற மரபணு செயலாக்கத்தின் இறுதிப் புள்ளியின் ஒரு பொதுவான வெளிப்பாட்டையோ அல்லது பிற மரபணுவின் பல உருத் தோற்றத்தாலும் சுற்றுப்புறச் சூழலாலும் மாற்றியமைக்கப்பட்ட வேறுபட்ட புறத்தோற்ற வெளிப்பாட்டுடனான  தனி ஒரு மரபணுவின் குறைபாட்டையோ AKC பிரதிநிதித்துவப் படுத்தலாம்.

மேல்தோல் தடைக் குறைபாடு:

மிக அண்மை ஆய்வுகள், ஒரு நோய்த்தடுப்பு முறைப்படுத்தும் செயல்பாட்டுக் குறைபாட்டை விட, ஒரு மேல்தோல் தடை குறைபாடே காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறது.

AKC யோடு தொடர்புடையதாக இருக்கக் கூடிய ஒவ்வாமை (ஒவ்வாமை நோய்களை உருவாக்கும் மரபியல் கூறுகள்) மண்டல நோய்கள்:

-    தோல் அழற்சி பொதுவாகக் காணப்படும்

-    சொறி

-    ஆஸ்துமா

-    புதர்க் காய்ச்சல்

-    ஒற்றைத் தலைவலி

-    தடிப்புச் சொறி

-    நாசியழற்சி

-    உணவு ஒவ்வாமை (அருகியது)

-    மரபாக ஏற்படாத குருதிக்குழல் வீக்கம் (அருகியது)

AKC பின்வரும் கண் நோய்களோடும் தொடர்புடையதாக இருக்கலாம்:

-    வெண்படலக் கூம்பல்

-    முன் சார்-பொதி கண்புரை

-    பின் சார்-பொதி கண்புரை

-    நீடித்த ஸ்டேபிலோகாக்கல் இமையழற்சி

-    விழித்திரை விடுபடல்

AKC யின் நோய்கண்டறிதல் மருத்துவ ரீதியான அம்சங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

VKC யின் நோய்த்தோற்றவியல் பதில்வினைகளைக் காரணமாகக் கூறினாலும் இயல்பற்ற நேர்வுகளில் நோய்கண்டறிதலை உறுதிப்படுத்தவோ நோயின் போக்கைக் கணிக்கவோ எந்த ஓர் ஆய்வகச் சோதனையும் கண்டுபிடிக்கப்படவில்லை.

நோயாளி அல்லது குடும்பத்தில் மரபுவழி ஒவ்வாமை வரலாறு, முழு மற்றும் குறிப்பிட்ட IgE யின் உயர் ஊனீர் அளவு, ஈசினோபில் மற்றும் ஊட்ட (மாஸ்ட்) செல்களின் அதிக எண்ணிக்கை, அதிக அளவு செயலூக்கிகள் மற்றும் எதிர் ஒவ்வாமை சிகிச்சைக்குப் பலன் ஆகியவை AKC.யில் அவதானிக்கப்பட்டுள்ளன.

விழிசார் மருத்துவ அம்சங்கள்:

சுற்று விழிக்கோள அம்சங்கள்:

-    தோல் அழற்சி: விழிக்கோளத்தைச் சுற்றியுள்ள தோலில் செதிள், துகள் தோலழற்சியுடன் தொடர் சொறி.

-    மிகைநிறமி: விழிக்கோளத்தைச் சுற்றியுள்ள தோலில் மிகை நிறமி. அழற்சியைக் கட்டுப்படுத்தியவுடன் நிறம் வெளிறல்.

-    தெ ஹெர்த்தோகே குறி: தெ ஹெர்த்தோகே குறி அல்லது பக்கவாட்டு புருவம் இல்லாமை அரிதாகக் காணப்படும்; இது நீடித்த கண் தேய்ப்போடு தொடர்புடையது.

இமைகள்:

-    தோல் அழற்சி: அடிப்பகுதி சிவப்பான செதிள், துகள் தோலழற்சி; இமையில் நிலையான சொறி.

-    செங்குத்து நெளிவுகள்:  மேல் கீழ் இமைகளின் உள் கண்மூலையில் செங்குத்து நெளிவுகள் ஏற்படலாம்.

-    இமைத்தோல் வெடித்தல்: பெரும்பாலும் இமையின் தோலில் வெடிப்புகள் உண்டாகும்.

-    இமை விளிம்பு தடித்தல்: இமை விளிம்பு தடித்தல், வீங்குதல் அல்லது குருதி மிகைத்தல்.

-    டென்னி-மோர்கன் வரிகள்: இமை விளிம்பு தடித்தல் டென்னி-மோர்கன் வரிகளுக்கு இட்டுச்செல்லும். கீழ் இமையில் இவை ஒற்றை அல்லது இரட்டை மடிப்புகளாகக் காணப்படும். இது நீடித்த கண்தேய்த்தலின் இரண்டாம் கட்டமாக ஏற்படுவது.

-    பக்கவாட்டுக் கண்மூலைப் புண்: நீடித்தக் கண்ணீர் வடிதலால் பக்கவாட்டுக் கண்மூலைப் புண் ஏற்படுதல்.

-    இமைப் பிழை-நிலை: நீடித்த இமை வீக்கம் மற்றும் அழற்சியால் இமைப் பிழை நிலை ஏற்படும். இதனால் உண்டாகின்றவை:

1.   இமை வெளித் துருத்தல்

2.   இமை இறக்கம்

3.   இமை மூடாமை

-    இமைமயிர் இன்மை: நீடித்த இமை வீக்கம் மற்றும் அழற்சியால் இமைமயிர் இழப்பு ஏற்படும். இமை விளிம்பில் பிசிர் இழப்பும் கண்ணீர்த்துளை வெளித்துருத்தலும் காணப்படும்.

-    நிரந்தர இமை வீக்கம்: நீடித்த வீக்கம் நிரந்தர வீக்கமாக மாறும். இதுவே மரபு வழி ஒவ்வாமைக் கண் நோயின் அடையாளம்.

-    இமை விளிம்பில் கெராட்டினாக்கம்: இமை விளிம்பு கெராட்டினாக்கத்தோடு, மெய்போமியன் சுரப்பி அழற்சியும், மெய்போமியன் சுரப்பி அழிவும் உருவாகும்.

கண்சவ்வு:

-    இமைக் கண்சவ்வு: இமைக் கண்சவ்வில் காம்புப் பொருமல் காணப்படும்; இது கீழ் இமைத் தகட்டில் மிகத் தெளிவாகத் தெரியும்.

-    பெரும் காம்புக்கட்டிகள்: VKC போன்ற பெரும் காம்புக்கட்டிகள் உருவாகும்.

-    வீக்கம்: பரந்தத் தாள் போன்ற ஊடுறுவலால் கண்சவ்வில் மங்கல் வெண் வீக்கமும் இரத்தக் குழாய்த் தடையும் உண்டாகும். குழல் கண்சவ்வில் பரந்த விழிச்சவ்வு வீக்கமும் உட்புகுதலும் காணப்படும்.

-    கண்சவ்வில் வடு: பெரும்பாலும் வலை அல்லது இடைச்சுவர் வடிவ வடு உண்டாகும்.

-    இணையிமை உருவாதல்: சார் மேல்தோல் நார்த்திசுத்தடிப்பு இணையிமை உருவாகலாம்.

-    வளைவு முன்குறுக்கம்: சார் மேல்தோல் நார்த்திசுத் தடிப்பால் கண்சவ்வில் வளைவு முன்குறுக்கமும் உண்டாகலாம்.

-    வெண்வெளிப்படலச் சந்திப்பு: படலச்சந்திப்பில் ஊடுறுவலும் வீக்கமும் இருக்கும். மேலும், பெரிய காம்புக்கட்டிகள் கொண்ட களிபோன்ற படலச்சந்திப்புத் தடிமனும் சில வேளைகளில் காணப்படலாம்.

-    வெண்புள்ளிகள்: VKC யில் காணப்படுவது போல நுண் வெண் புண்கள் உருவாகும். இவற்றில் இறந்த மேல் செல்களும் ஈசினோபில்களும் இருக்கும்.

வெண்படலம்:

AKC கொண்ட நோயாளிகளில் வெண்படல தொடு உணர்வு தாமதமாகக் குறைவதால் அரிப்பு உள்ளடங்கிய மேற்புற அறிகுறிகள் முரண்பாடாகக் குறைந்து வெண்படல நோய் சிக்கல் உடையாதாக மாறுகிறது.

-    புள்ளி மேற்செல் வெண்படல நோய்: பரவலாகக் காணப்படும் வெண்படல நோய்.

-    இழை வெண்படல அழற்சி: மிகவும் கட்டியான சளி இழைப் புரிகளுடன் சில சமயம் இழை வெண்படல அழற்சி உண்டாகும். குடுவை செல் கோளாறுகளினால் கண்ணீர்ப்படல நிலையாமைலும் உமிழ்நீர் நொதிப்பொருள் குறைச் சுரப்பாலும் இது நேரக் கூடும். பொதுவாக AKC யில் இது ஒரு அம்சமாகும்.

-    நிரந்தர மேல்செல் குறைபாடு: உலர்ந்த அழற்சியுற்ற கண் பரப்பில் அடிக்கடி நிரந்தர மேல்செல் குறைபாடு உருவாகிறது. இதனால் பெரிய அளவில் அரிப்பு ஏற்படும். ஒவ்வாமை நோயாளிகளில் இதனால் வெளிப்படையான நுண்ணுயிரிப் புண்களும் உண்டாகும்.

-    இளவேனிற் காறையோடு ஒவ்வாமைக் கவசப் புண்கள் உருவாதல்: ’இளவேனிற்’ காலக் காறையோடு ஒவ்வாமைக் கவசப் புண்களும் உருவாகலாம். ஒட்டும் தன்மையுள்ள சளிக் காறைகளில் மேல்செல் சிதைவுகள், ஈசினோபில்கள் மற்றும் அழற்சியுற்ற செல்கள் அடங்கி இருக்கும். இவை, பெரிய காம்புக் கட்டிகளில் செயற்கையாக உறுத்தல் உண்டாக்குவதாலோ, அழற்சியின் இரண்டாம் கட்டமாக நச்சு மேற்செல் மாற்றங்கள் ஏற்படுவதாலோ உருவாகின்றன. இந்தக் காறைகள் நிரந்தரமாகும் போது அடித்தளத் திசுக்களில் மெலிவும் ஓட்டையும் ஏற்படலாம். நீடித்த அழற்சியாலும் இமைவடு செயற்கையாக சிதைவுறுதலாலும் முழு அல்லது பகுதி வெண்வெளிப் படல சந்திப்பு அடி செல் குறைவு உருவாகிறது. நீடித்த அழற்சியாலும் மேலும் மேலும் தொற்று ஏற்படுவதாலும் வெண்படல வடு, புதுக்குழல் உருவாதல் மற்றும் லிப்பிட் படிவு உண்டாகும். பார்வை அச்சு மறைக்கப்படுவதால் பார்வைக் குறைவும், ஒழுங்கற்ற உருப்பிறழ்ச்சியும், விழிப்பரப்புக் கோளாறுகளும் உண்டகும்.

-    படலம் உருவாதல்: வெண்படலத்தின் மேல் மூன்றில் ஒரு பகுதியை பாதிக்கும் அளவுக்கு கடுமையான படலம் பெரும்பாலும் உருவாகிறது.

-    போலி வெண்படல மஞ்சள்: புற வெண்படலத்தில் இது காணப்படும். வெண்படல விளிம்பில் வெள்ளை அல்லது சாம்பல் ஒளிபுகா வளையாமாகத் தோன்றும். இது படலச்சந்திப்பில் (லிம்பஸ்) இயல்பற்ற இரத்தக்குழல் ஊடுறுவலோடு தொடர்புடைய லிப்பிட் படிவாகும். இயல்பான ஒரு கண்ணில் முந்திய ஒவ்வாமை நோயின் ஒரே சான்று இதுவாக இருக்கலாம்.

பிற சிக்கல்கள்/அம்சங்கள்:

-    இமை அழற்சி: AKC யில் பொதுவாக இமையழற்சி உண்டாகும். பெரும்பாலும் ஸ்டேபிலோகாக்கல் இமையழற்சியோடு தொடர்புடையதாக இருக்கும். ஒவ்வாமைத் தோல் அழற்சி உள்ள நோயளிகளுக்குக் குறிப்பாக ஸ்டேபிலோகாக்கல் பாக்டீரியாக்களின் தோல் குடியிருப்புகள் அதிகமாகக் காணப்படும்.

-    வெண்படல மேல் தொற்று: நிலைத்தனமை அற்ற விழிப்பரப்பாலும், இமையில் நுண்ணுயிரிகள் தங்கி இருப்பதாலும், நோய்த்தடுப்பு அமைப்பு செயலற்று இருப்பதாலும் AKC நோயாளிகளுக்கு வெண்படல மேல் தொற்று ஏற்படும் ஆப்த்துள்ளது. AKC யின் இன்னொரு சிக்கல் சிற்றக்கி வைரஸ் வெண்படல அழற்சி ஆகும்.  ஒவ்வாமையுள்ள ஓம்புயிரின் நோய்த்தடுப்பு மண்டலத்தின் கோளாறுகள் இதற்குக் காரணமாக இருக்கலாம். ஒவ்வாமையைக் கட்டுப்படுத்த மேற்பூச்சு அல்லது மண்டல நோய்த்தடுப்பு அடக்கிகள் தேவைப்படும் போது அக்கி புறத்திசுசெல் புண்கள் அடிக்கடி ஏற்படலாம். AKC  புண்களை சிற்றக்கி வைரசு வெண்படல அழற்சியில் இருந்து வேறுபடுத்திக் காண்பது கடினம் என்பதால் நோய்மேலாண்மையில் சிரமம் ஏற்படும்.

-    கண்புரை உருவாதல்: AKC நோயாளிகளுக்கு விரைவாக அதிகரிக்கும் கண்புரை பெரும்பாலும் உருவாகும். பொதுவாக முன் சார்-பொதி ஒளிபுகாமை என விளக்கப்படும் இது நட்சத்திர அல்லது கவச வடிவத்தில் காணப்படும். ஒவ்வாமைக் கண்புரையின் நோய்த்தோற்றவியல் தெளிவில்லை. இந்த நோயாளிகளுக்குக் கண்புரை உருவாவது அதிக அளவில் IgE காணப்படுவதோடு தொடர்புடையது என கூறப்படுகிறது. கடுமையான மண்டல ஒவ்வாமை நோய் உள்ளவர்களுக்கு கோர்ட்டிக்கோஸ்டிராய்ட் பயன்பாடு அல்லாமல் சுயாதீனமாகவும் பிற கண்புரை வடிவங்கள் தோன்றலாம்.

-    வெண்படலக் கூம்பல்: AKC-யில் அதிக அளவில் வெண்படலக் கூம்பல் பதிவாகியுள்ளது. இது ஒரு விதத்தில் நீடித்த கண் தேய்த்தலோடு தொடர்புடையதாக இருக்கலாம்.

-    ஒளிபுகும் விளிம்புச் சிதைவு: அதிக அளவில் காணப்படும் இதுவும் ஒரு விதத்தில் நீடித்த கண் தேய்த்தலோடு தொடர்புடையதாக இருக்கலாம்.

-    விழித்திரை விடுபடல்: அதிக அளவில் காணப்படும் இதுவும் ஒரு விதத்தில் நீடித்தக் கண் தேய்த்தலோடு தொடர்புடையதாக இருக்கலாம். இதனால் சிதைவுறும் விழிப்பின்னறை மாற்றங்கள் தூண்டப்படுகின்றன.

திசுவியல்/நோய்த்தடுப்பு திசுவேதியல் ஆய்வுகள்:

AKC நோயாளிகளின் வெளிப்படல மாதிரிகள் அதிக எண்ணிக்கையில் ஊட்ட (மாஸ்ட்) செல்களையும், ஈசினோபில்களையும்,  T லிம்போசைட்டுகளையும், நியூரோபில்களையும் இவ்வாய்வில் காட்டுகின்றன.

வெளிப்படல புறத்திசுசெல்லில் ஊட்ட செல்களும் ஈசினோபில்களும் கண்டறியப்படுவதோடு அவைகள் அதிக எண்ணிக்கையில் விழிவெண்படல இழையவலையிலும் காணப்படுகின்றன. மிகையாக லேங்கர்தான்ஸ் செல்களும், மேக்ரோபேஜுகளும், B செல்களும் விழிவெண்படல இழையவலையில் காணப்படுகின்றன.

AKC-யில் T- லிம்போசைட் ஊடுறுவல் வெண்படல மேல்செல்லிலும் இழையவலையிலும் தெளிவாகத் தெரிகின்றன. T-ஹெல்ப்பர் (Th)  செல்கள் அனைத்து ஒவ்வாமை வடிவங்களிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. Th1 துணைவடிவம் செல்சார் நோய்த்தடுப்பிலும் Th 2 துணைவடிவம் உடல் பாய்ம நோய்த்தடுப்புப் பதில்வினைகளிலும் செயல் ஆற்றுகின்றன (IgE யால் செயலூக்கம் பெற்றவைகளையும் உள்ளடக்கி). Th 2 செல்கள் ஈசினோபில்லை அதிகரிப்பதிலும்   B செல்களில் இருந்து IgE உற்பத்தியாவதைத் தூண்டுவதிலும் பங்கேற்கின்றன. AKC யில் அழற்சி செல்களை அதிகரிப்பதிலும் செயலூக்குவதிலும் Th 2 சைட்டோகைன்கள் பங்காற்றுகின்றன.

செயலூக்கம் பெற்ற ஈசினோபில்கள் கூடுதலாக அழற்சி செல்களை விழிப்பரப்புக்குக் கொண்டு வருகின்றன. அவை ஈர்ப்பு இரசாயனங்களை வெளிவிடுகின்றன. இவை நியூட்ரோபில்களை வெண்படலத்துக்கு ஈர்க்கின்றன. AKC-யில் பார்வை இழப்பு ஆபத்தை விளைவிக்கும் வெண்படல சிக்கல்களை உருவாக்குவதில் ஈசினோபில்கள் பெரும் பங்கு ஆற்றுகின்றன.

VKC-யில் வெண்படல மேற்தோல் செல்களும் நார்முன்செல்களும் அழற்சி செயலூக்கிகளை உற்பத்தி செய்கின்றன. மேற்பரப்பு ஒட்டு மூலக்கூறுகளை உற்பத்தி செய்வதாலும் மேற்தோல் செல்கள் சைட்டோகைன்களை வெளிவிடுவதாலும் ஈசினோபில்கள் அதிகரிக்கின்றன. வெண்படல நார்முன்செல்கள் Th சைட்டோகைன்களால் செயலூக்கப்படும் பொழுது ஈசினோ பில்கள் குறிப்பிட்ட பகுதியில் திரண்டு ஈசினோபில் குருணைக்கட்டி உருவாக்கத்தை அதிகரிக்கிறது.

இரண்டாம் கட்ட அமைப்பு மாற்றங்கள்:

AKC-யில், அதிகப்படியான அழற்சி, நீடித்த விழிப்பரப்பு மாற்றங்களுக்கு வழிகோலுகிறது:

-    குடுவைசெல் இழப்பு/மிகைப்பு: குடுவை செல் இழப்பும் (ஒற்று உயிரணுவியல் அடிப்படையில்) குடுவை செல் மிகைப்பும் (வெண்படல திசுவளர்ச்சி சோதனை அடிப்படையில்) காணப்படுகின்றன. குடுவை செல் மியூசின் உற்பத்தியில் மாற்றம் ஏற்படுகிறது.

-    கண்ணீர்ப்படல நிலையாமை: கண்ணீர்ப்படல நிலையாமையும், கண்ணீர் உடைபடும் நேரம் (BUT)  அதிகரிப்பும், அதேவேளையில் இயல்பான கண்ணீர் உற்பத்தியும் காணப்படுகின்றன.

-    வெண்படல உணர்திறன்: இது AKC-யில் குறைகிறது.

-    செதிள் திசுஇயல்பு மாற்றம்: AKC நோயாளிகளிடம் இது காணப்படுகிறது.

பொதுக்குவிய நுண்ணோக்கி ஆய்வுகள்:

அடித்தள மேற்தோல் செல் மற்றும் சார்-அடித்தள வெண்படல நரம்பு நிலை மாற்றங்களில் AKC தொடர்புடையதாக இருக்கிறது. இதனால் கண்ணீர் செயல்பாட்டிலும் வெண்படல உணர்திறனிலும் மாற்றங்கள் விளைகின்றன. அடித்தள மேற்தோல் செல்களில் குறை அடர்த்தி காணப்படும். சார்-அடி நீள் நரம்புகளின் எண்ணிக்கையும் அடர்த்தியும் குறைவதால் வெண்படல உணர்திறன் குறைகிறது. வெண்படல நரம்புகள் தடிப்பாகி கிளைத்தல் கோளாறுகள் உண்டாகின்றன. மேலோட்டமான அடித்தளத் திசுவில் அழற்சி செல்களும் செயலூக்கம் பெற்ற கெரட்டோசைட்டுகளும் காணப்படுகின்றன.

AKC பின் வருவனவற்றில் இருந்து வேறுபடுத்தப்பட வேண்டும்:

-    நீடித்த ஒவ்வாமை வெண்படல அழற்சி (உ-ம். VKC)

-    இமையழற்சி

-    வைரல் வெண்படல அழற்சி

-    கண்ணிமை நோய்

-    தழும்பு குமிழ்ச்சரும நோய்

VKC யோடு ஒற்றுமைகளும் வேறுபாடுகளும்:

ஒற்றுமைகள்:

-    பார்வையிழப்பை உருவாக்கும் சாத்தியக் கூறுள்ள நீடித்த நோய்கள்: AKC மற்றும் VKC நீடித்த நோய்கள், பார்வையிழப்பை உருவாக்கும் திறன் வாய்ந்தவை.

-    ஒவ்வாமை: ஓர் ஒவ்வாமைப் பின்னணியால் முன்தீர்மானிக்கப்பட்ட நபர்களில் இவை இரண்டும் உள்ளன.

-    மிகு உணர்திறன் பதில்வினைகள்: இரண்டு நோய்களுமே வகை I மற்றும் வகை  IV மிகு உணர்திறன் பதில்வினைகளை உள்ளடக்கியவை. இரு நிலைகளிலுமே ஈசினோபில்களும் T லிம்போசைட்டுகளும் வெண்படலத்துக்குள் ஊடுறுவுவது கண்டறியப்பட்டுள்ளன.

-    மருத்துவ அம்சங்கள்: மருத்துவ ரீதியாக இவை இரண்டும் ஒன்றே. வெண்படல் அழற்சி, மேற்தோல் செல் குறைபாடுகள், கவசப் புண்கள் மற்றும் வெண்படலம் வடுவுறல் ஆகியவை இரண்டு நோய்களின் முக்கிய அம்சங்கள் ஆகும்.

வேறுபாடுகள்:

-    வயதுக் குழுக்கள்: AKC, VKC யை விட அதிக வயதில் ஏற்படுகிறது. VKC பொதுவாக பின் பருவ வயதில் வெளிப்படுகிறது. AKC பல ஆண்டுகள் நீடித்து முதிர் வயதிலும் தொடர்ந்து, பின் தானாகவே குணமடயலாம்.

-    பார்வை பாதிப்பு: AKC யில் இது கடுமையாக உள்ளது.

-    விழிக்கோள சுற்றுத் தோலும் இமையும்: தோல் பாதிப்பு AKC யில் அதிகம். VKC யில் தோல் பாதிக்கப்படுவதில்லை.

-    காம்புக்கட்டி: AKC யில் இமை வெண்படலத்தில் நுண்காம்புக்கட்டிகள் தோன்றலாம். கீழ் இமைத்தகடு குறிப்பாகப் பாதிக்கடலாம். மாறாக VKC யில் கீழ் இமைத்தகட்டில் காம்புக்கட்டிகள் தெளிவாகக் காணப்படும். பெரும் காம்புக்கட்டி AKC யில் எப்போதாவது காணப்படும் ஆனால், VKCயில் இது உறுதியான அடையாளம் ஆகும்.

-    இமைவிளிம்பு: VKC போல் அல்லாமல் AKC யில் இமை விளிம்பு பாதிக்கப்படும். தழும்பு மாற்றம், வளைவு முன்குறுகல் மற்றும் இணையிமை ஆகியவை AKC யில் காணப்படும்; ஆனால் VKCயில் பொதுவாகக் காணப்படுவதில்லை.

-    பெரும்பாலும் AKC  யை விட VKC யில் வெளிர் சாம்பல்சிவப்பு ஒழுங்கற்ற புள்ளிகள் (திராந்தாஸ் புள்ளி) காணப்படும்.

மருத்துவக் கண்காணிப்பின் கீழேயே சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்:

AKC நோயின் நீடித்த தன்மையால். சிகிச்சையின் பலனுக்கும் ஆபத்துக்கும் இடையில் சமநிலை பேணுவது பெரும்பாலும் கடினமான ஒன்றே. சிகிச்சைக்குப் பலன் இருப்பதில்லை. தீவிரமான நீண்ட மருத்துவம் தேவைப்படும்.

மேலாண்மை அணுகுமுறை பன்முகப்பட்டது. நோயாளியின் சுகத்தை மேம்படுத்துவதும், AKC யோடு தொடர்புடைய சிக்கல்களைத் தடுப்பதுமே நோக்கம் ஆகும். மேற்பூச்சு ஊக்க செல் நிலைப்படுத்திகள், கோஸ்ஸ்ட்டிக்கோஸ்டிராய்டுகள், மேற்பூச்சு சைக்ளோஸ்போரின் போன்ற ஊக்கமருந்தின் அளவு குறைந்த நோய்த்தடுப்பாற்றல் அடக்கிகள் ஆகிய பல்முனை சிகிச்சைகள் மேலாண்மையில் அடங்கி உள்ளன. கடுமையான நேர்வுகளுக்கு மண்டல நோய்த்தடுப்பு அழுத்தம் தேவைப்படும்.

பொதுவான நடவடிக்கைகள்:

-    சூழல் ஒவ்வாமை ஊக்கிகள்: சூழல் ஒவ்வாமை ஊக்கிகளைக் கட்டுப்படுத்துவது உதவியாக இருக்கும். ஆனால் விளைவியத்தைத் தவிர்ப்பது ஒரு இணைந்த சிகிச்சை ஆகும்.

-    இமை சுத்தம்: AKC இமைகளைப் பாதிப்பதால் மொத்த விழிப்பரப்போடு அடிப்படையான இமை சுத்தமும் இன்றியமையாதது. இமையழற்சியையும் ஸ்டேபிலோகோக்கல் கெராட்டிட்டிஸ் ஆபத்தையும் தவிர்க்க இமை தேய்த்தல் தினசரி நடவடிக்கைகளில் ஒன்றாக இருக்க வேண்டும். இமை விளிம்புகளுக்கு நுண்ணுயிர்க்கொல்லிக் களிம்புகளையும் தடவலாம்.

-    வெதுவெதுப்பு/குளிர் ஒத்தடங்கள்: இமை விளிம்பு அழற்சியோடு தொடர்புடைய மெய்போமியன் சுரப்பி செயலிழப்பு கொண்ட நோயாளிகளுக்கு வெதுவெதுப்பு ஒத்தடம் கண்ணீர் நிலைத்தன்மையை மேம்படுத்தும்.

கடுமையான அரிப்பு அல்லது விழிக்கோளச் சுற்று ஒவ்வாமை தோலழற்சி அதிகரிப்பு இருந்தால் குளிர் ஒத்தடம் அறிகுறிகளுக்கு நிவாரணம் அளிக்கலாம்.

மருத்துவ சிகிச்சை:

AKC நோயைப் பொதுவாக மருத்துவத்தால் கட்டுப்படுத்தலாம். அழற்சி முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டால் தேர்ந்தெடுக்கும் அறுவை சிகிச்சை பயன்தரக்கூடும்.

பாதுகாப்பான மருந்துகளை மிகக் குறைந்த அளவில் அளித்து விழிப்பரப்பு அழற்சியை முற்றிலுமாகக் கட்டுப்படுத்துவதே சிகிச்சையின் நோக்கமாகும்.

முற்காப்பு சிகிச்சையில் முக்கியமானவை ஊக்க செல் நிலைப்படுத்திகளும் எதிர்ஹிஸ்ட்டமின்களும் ஆகும். எதிர்ஹிஸ்ட்டமின்கள், ஊக்கமருந்துகள் மற்றும் தடுப்பாற்றல் அழுத்திகள் ஆகியவை உடனடி அறிகுறி மேலாண்மைக்குப் பயன்படுத்தப்படுகின்றன.

இமைகள்:

-    எரிச்சல் நீக்கிகள்: இமைத் தோலில் பூசப்படும் எரிச்சல் நீக்கிகள் விழிச்சுற்றில் சொறியைக் கட்டுப்படுத்த உதவும்.

-    ஊக்கமருந்துக் களிம்புகள்: விழிச்சுற்றில் சொறியைக் கட்டுப்படுத்த மிதமான ஊக்கமருந்துக் களிம்புகளும் உதவும். கண் சொட்டு மருந்துகளைப் போலவே சிகிச்சையின் கால அளவைக் குறைக்கவும் உட்கண் அழுத்தம் கண்காணிக்கவும் பட வேண்டும்.

-    நோய்த்தடுப்பாற்றல் அடக்கிகள்: இமை ஒவ்வாமைத் தோல் அழற்சிக்கு சிகிச்சை அளிப்பதில் குறைந்த அளவு ஊக்கமருந்து அடங்கிய டேக்ரோலிமுஸ் களிம்பு பலனளிக்கிறது.

விழிப்பரப்பு:

-    மேற்பூச்சு செயற்கைக் கண்ணீர்: மேலோட்டமான புள்ளி வெண்படல நோய்க்கு தீவிரமான மசகு தேவைப்படும். இதற்குப் பதப்படுத்தும் பொருள் அற்ற செயற்கைக் கண்ணீரும் மசகுக் களிம்புகளும் பயன்படுத்தப்படும்.  இதன் நோக்கம் சுகத்தை அதிகரித்து வெளிப்படையான மேற்தோல் செல் குறைபாட்டை தவிர்ப்பது ஆகும், ஏனெனில் ஒவ்வாமை உள்ளவர்களூக்கு இவைகளைக் கட்டுப்படுத்துவது கடினமாகும்.

-    மேற்பூச்சு நுண்ணுயிர்க்கொல்லிகள்: புறத்திசுசெல் அரிப்பு இருந்தால், மேற்பூச்சு நோய்த்தடுப்பு நுண்ணுயிர்க்கொலிகளைப் பயன்படுத்த வேண்டும். AKC யில் புறத்திசுசெல் கோளாறுகளின் ஒரு சிக்கலான பாக்டீரியா மேல்தொற்றையும் வெண்படலத் தொற்றையும் இதனால் தடுக்க முடியும்.

-    கட்டு விழிவில்லை: வெண்படல புறத்திசுசெல் குறைபாட்டைக் குணப்படுத்த இவை பயன்படுத்தப்படுகின்றன.

-    வெளிப்படல விழிவில்லை: வெண்படல புறத்திசுசெல் அல்லது இழையவலை குறைபாடுகளோடு ஆனால் AKC கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் வெளிப்படல விழிவில்லை சிறந்த பார்வையையும் அதிக சுகத்தையும் அளிக்கும். இவ்வண்ணம் அறுவையைத் தவிர்க்கலாம்.

-    மேற்ப்பூச்சு அசெட்டைய்ல்செஸ்டின்: சளிமுறிப்பானான அசெட்டைய்ல்செஸ்டின் சளியிழைகளையும் படிவுகளையும் கரைத்து ஆரம்பக் காறை உருவாக்கத்தையும் தடுக்கலாம்.

-    மேற்பூச்சு ஆன்டிஹிஸ்ட்டமின்கள்: இணைப்படல ஹிஸ்ட்டமின் ஏற்பிகளை அடைத்து கடும் AKC அறிகுறிகளைக் குறைக்க ஆன்டிஹிஸ்ட்டமின் கண் சொட்டுக்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. கடும் நோய்த் தோன்றலுக்கு ஆன்டிஹிஸ்ட்டமின் பலன்தந்து அரிப்பைக் குறைக்கும். இவற்றை நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்தக் கூடாது. குறுகிய கால அளவுகளுக்குப் வெவ்வேறு தயாரிப்புகள் பயன்படுத்தப்படும். கண்களில் மட்டுமே காணப்படும் ஒவ்வாமை நோய்களுக்கு மேற்பூச்சு ஆன்டிஹிஸ்ட்டமின்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. மண்டலம் சார் நோய்களுக்கு பயன்படுத்தப்படும் வாய்வழி ஆன்டிஹிஸ்ட்டமின்களால் ஏற்படும் தேவையற்ற பக்கவிளைவுகள் இதில் இல்லை. மேற்பூச்சு ஆன்டிஹிஸ்ட்டமின்கள், மண்டலம்சார் ஆன்டிஹிஸ்ட்டமின்களை விட விரைவாக நிவாரணம் அளிக்கின்றன. மேலும், விழி ஒவ்வாமைக்குப் பொதுவாகப் பயன்படுத்தப்படும் மேற்பூச்சுக் குழல்சுருக்கிகள், ஊக்கமருந்தல்லாத எதிரழற்சி மருந்துகள், தூய ஊட்ட (மாஸ்ட்) செல் நிலைப்படுத்திகள், மற்றும் கோர்ட்டிகோஸ்டிராய்டுகளை விட அதிகக் கால அளவுக்கு செயலாற்றும். பிரிலமின் மற்றும் பெனிரமின் ஆகியவை எடுத்துக்காட்டுகள். மேற்பூச்சு ஆன்டிஹிஸ்ட்டமின்களைத் தனியாகப் பயன்படுத்தும் போது அவை ஊட்டசெல் நிலைப்படுத்திகளின் அளவுக்குப் பயன் அளிக்கும். அவை கடும் நோய் அதிகரிப்புக்கு ஏற்றதே தவிர நீண்ட நாள் பயன்பாட்டுக்கு உரியது அல்ல. குறைந்த பட்ச கால அளவுகளுக்குப் பல்வேறு தயாரிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன.

-    மண்டலம்சார் ஆன்டிஹிஸ்ட்டமின்கள்: மேற்பூச்சு குழல்சுருக்கிகளையும் (உ-ம். சைலோமெட்டாசோலின்) எதிர்ஹிஸ்ட்டமிகளையும் (உ-ம்: ஆன்டாசோலின்) இணைத்து அளிப்பது சில நேர்வுகளுக்கு பலன் அளிக்கலாம்.

-    மேற்பூச்சு ஊட்ட செல் நிலைப்படுத்திகள்: ஆரம்பக்கட்ட விழியிணைப்படல அழற்சிக்கு மேற்பூச்சு ஊட்டசெல் நிலைப்படுத்திகள் பயன்படுத்தப்படலாம். அடிக்கடி கடும் நோய் மிகைப்பு ஏற்படுவதையும் ஊக்கமருந்தின் தேவையையும் இது குறைத்து பல சிகிச்சை முறைகளின் அடிப்படையாக அமையும். ஆனால் தனியாகப் பயன்படுத்தும்போது அதிகமாகப் பலன் அளிப்பதில்லை. குறைந்த பட்ச பலன் கிடைக்கப் பல நாட்கள் அல்லது வார மருத்துவம் தேவைப்படும். சோடியம் குரோமோகிளைகேட், நெடோகுரோமிட், லோடோசமைட், பெமிரோலாஸ்ட் ஆகியவை ஊட்ட செல் நிலைப்படுத்திகளில் அடங்கும். மிதமான AKC நேர்வுகளில் பராமரிப்பு சிகிச்சையாக இவை பலனளிக்கும்.

-    தேர்ந்த மேற்பூச்சு இரண்டாம் தலைமுறை H1-தடுக்கும் எதிர்ஹிஸ்ட்டமின்கள்: அறிகுறிகளைக் கட்டுப்படுத்த குழல்சுருக்கிகளைத் தனியாகவோ குறிப்பானது அல்லாத எதிர்ஹிஸ்ட்டமின் சொட்டு மருந்துகளுடன் சேர்த்தோ பயன்படுத்துவதை விட தேர்ந்த மேற்பூச்சு H1-ஏற்பி தடுப்பிகள் சிறந்தவையாகும். இவற்றில் எமெடாஸ்டின் மற்றும் லெவோகேபஸ்டின் போன்ற மருந்துகள் அடங்கும். பெனிரமின் போன்ற முதல் தலைமுறை எதிர்ஹிஸ்ட்டமின்களை விட இவற்றின் மேம்பட்ட மருத்துவத் திறனுக்குக் காரணம் அழற்சியை உருவாக்கும் சைட்டோகின்கள் மேல் புதிய தலைமுறை எதிர்ஹிஸ்ட்டமின்களுக்கு இருக்கும் அதிகத் தடுக்கும் திறன் ஆகும். இரண்டாம் தலைமுறை மேற்பூச்சு H1  எதிர்ஹிஸ்ட்டமின்கள், இதயத்துடிப்பு சீர்பிறழ்வை விளைவிக்கும் நடு நரம்பு மண்டல H1 ஏற்பிகள், கோலிநெர்ஜிக் ஏற்பிகள், மேலும் சில H2 ஏற்பிகள் ஆகியவற்றிற்கு மாறாகப்  புற H1 ஏற்பிகளுக்கு அதிக ஏற்புடையதாகும். இத்தகைய ஏற்புத் திறனால், தூக்கக் கிறக்கம்/மயக்கம் உலர்விழி மற்றும் உலர் வாய் போன்ற மருந்துப் பக்கவிளைவுகள்  குறிப்பிடத்தக்க விதமாகக் குறைகின்றன.

-    தேர்ந்த H1 தடுக்கும் எதிர்ஹிஸ்ட்டமின்கள் மற்றும் மேற்பூச்சு ஊட்டசெல் நிலைப்படுத்திகள் (இருவினை மருந்துகள்): அசேலாஸ்டின், எப்பினாஸ்டின், பெப்போடாசின், ஓலோபட்டாடின் ஆகிய மருந்துகளுக்கு ஊட்டசெல் நிலைப்படுத்தல் மற்றும் எதிர்ஹிஸ்ட்டமின் பண்புகள் அடங்கியுள்ளன. ஒவ்வாமைக் கண் நோய்களுக்கு இவை பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன. இவை விரைவாக செயல்படுகின்றன. இந்த மருந்துகளுக்கு T-செல் பாதிப்பால் ஏற்பட்டும் அழற்சியை நேரடியாகக் கட்டுப்படுத்தும் திறன் இல்லை. ஆனாலும் இவை ஒட்டுமொத்த அழற்சியைக் குறைக்கும். வெண்படலக் கூம்பலோடு தொடர்புடைய கண் தேய்த்தலையும் AKC தொடர்புடைய கண்புரையையும் முக்கியமாகக் குறைக்கும்.

-    ஊக்கமருந்தல்லாத எதிர் அழற்சி மருந்துகள்: கீட்டோரோலாக், டைக்ளோஃபெனாக் போன்ற ஊக்கமருந்தல்லாத எதிர் அழற்சி மருந்துகள் ஹிஸ்ட்டமின் அல்லாதக் கடத்திகளைத் தடுத்து நிலையை மேம்படுத்துகின்றன. இவற்றில் ஒன்றை ஊட்டசெல் நிலைப்படுத்தியோடு இணைத்துக் கொடுக்கும் சிகிச்சை முறையால் சில நோயாளிகளுக்குப் பலன் கிட்டுகிறது.

-    மேற்பூச்சுக் கோர்ட்டிக்கோஸ்டிராய்ட் சிகிச்சை: AKC நோயின் கடுமையான அழற்சிக்கு மேற்பூச்சுக் கோர்ட்டிக்கோஸ்டிராய்ட் சிகிச்சை தேவைப்படுகிறது. பிற சிகிச்சைகள் பலன்தராத கடுமையான நேர்வுகளுக்கே மேற்பூச்சு ஊக்கமருந்துகள் குறுகிய காலகட்டத்திற்கு அளிக்கப்படுகின்றன. மேற்பூச்சு ஊக்க மருந்துகளை இடைவிட்டு மருந்தளித்தல் முறையில் (Pulse dosing) அளித்துத் தொடர்ந்து ஓர் ஊட்ட செல் நிலைப்படுத்தியினால் பராமரிக்கலாம். லோட்டேப்ரிட்னால் எட்டாபோனேட் மற்றும் ரிமக்சோலோன் போன்ற மாற்றுருவாக்கப்பட்ட ஊக்கமருந்துகளைப் பயன்படுத்தலாம். லோட்டேப்ரிட்னால் மிகவும் பாதுகாப்பான அம்சங்களைக் கொண்டது. AKC  அழற்சி விழிப்பரப்பில் இருப்பதால் சாத்தியப்படும் போது குறிப்பிடத்தக்க அளவில் விழியூடுறுவல் கொண்ட கோர்ட்டிக்கோஸ்டிராய்டுகளைத் தவிர்க்க வேண்டும். AKC  நோயாளிகளுக்கு ஊக்க மருந்து தொடர்பான கண்புரை, கூடிய உள்விழி அழுத்தம் போன்ற பக்க விளைவுகள் பெரும்பாலும் தவிர்க்க முடியாதவை. மேல் இமைத்தகட்டில் கோர்ட்டிக்கோஸ்டிராய்டை ஊசி மூலம் செலுத்துவது குணப்படுத்தக் கடினமான  நோயாளிகளுக்குப் பலன் அளிக்கலாம். ஆனால் இதற்கும் பக்க விளைவுகள் உண்டு.

-    மேற்பூச்சு நோய்த்தடுப்பாற்றல் கட்டுப்பாட்டு மருந்துகள்: மேற்பூச்சு சைக்ளோஸ்போரின் போன்ற ஊக்கமருந்தைக் குறைவாகப் பயன்படுத்தும் நோய்த்தடுப்பாற்றல் அடக்கிகள், சிக்சிச்சைக்குப் பின் Th செல்கள், B செல்கள் மற்றும் விழுங்கணுக்களைக் குறைக்கும் நோய்த்தடுப்பாற்றல் கட்டுப்படுத்தும் விளைவுகள் கொண்டன. கொட்டுதல் போன்ற அதிக வலியும், நீடித்த பார்வை மங்கலும் பக்க விளைவுகள். T செல் உற்பத்தியை சைக்ளோஸ்போரினை விட டேக்ரோலிமுஸ் களிம்பு அதிகத் திறனோடு தடுக்கிறது.

-    மண்டல நோய்த்தடுப்பாற்றல் அடக்கல்: பார்வைக்கு ஆபத்து விளைவிக்கும் சிக்கல்களைத் தடுக்க முற்றிய மற்றும் குணமடையாத  AKC நோய்க்கு சிலசமயம் மண்டல் நோய்த்தடுப்பாற்றல் அடக்கல் தேவைப்படும். பிரட்நிசோன், சைக்ளோஸ்ப்ரின். டேக்ரோலிமுஸ். மைக்கோஃபீனோலேட் மற்றும் அசத்தியோபிரின் போன்ற மருந்துகள் பலன்தரும்.

மண்டலம் மற்றும் பகுதி சார் நோய்த்தடுப்பாற்றல் அடக்கலின் பலன்கள் பாக்டீரியா மற்றும் வைரல் தொற்றின் குறிப்பிடத்தக்க  ஆபத்துக்கு எதிராக வைத்து சமநிலைப்படுத்தப்பட வேண்டும்.

-    ஒவ்வாமையூக்கி உணர்வுநீக்கல்: அதிக IgE ஊனீர் அளவு கொண்ட சில நோயாளிகளுக்கு இது பலன் அளிக்கலாம்.

-    ஊனீர் பிரிப்பு: அதிக IgE ஊனீர் அளவு கொண்ட சில நோயாளிகளுக்கு இச்சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அறுவை மருத்துவம்:

-    மேலோட்டமான வெண்படல அறுவை: புறத்திசுசெல் மற்றும் அழற்சி சிதைவுகளை அடித்தளமாகக் கொண்ட கவசப் புண் காறைகள் மேற்பூச்சு எதிர் அழற்சி சிகிச்சைக்கு பலன் அளிக்காது. மேலோட்டமான வெண்படல அறுவை மூலம் காறைகளும் கவசப் புண்களும் அகற்றப்பட்டு புண்ணை ஆற்ற வேண்டும். மீண்டும் நோய் ஏற்படாமல் தடுக்க வெண்படலம் ஆறும் வரை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

-    நிலையற்ற மூலக்கூற்று லேசர் ஒளிசிகிச்சை வெண்படல அறுவை  (PTK):  காறைகளையும் கவசப் புண் சிதைவுகளையும் அகற்றி புண்ணை ஆற்ற இது இன்னொரு முறையாகும்.

-    ஊடுறுவும் வெண்படல சீரமைப்பு (முழு தடிமன் வெண்படல மாற்றறுவை): வெண்படல வடுவுறலும் அரிதாகத் துளையும் கடுமையான நேர்வுகளில் ஏற்படலாம். இதற்கு ஊடுறுவும் வெண்படல சீரமைப்பு அறுவை தேவைப்படும்.

-    காம்புக்கட்டி வெட்டுதல்: மைட்டோமைசின் – சி (MMC) பிரயோகத்தோடோ இல்லாமலோ செய்யப்படும் இச்சிகிச்சையால் விழிப்பரப்பு அழற்சி குறைகிறது.

-    விழிப்பரப்புப் பராமரிப்பு/ மறுசீரமைப்பு முறைகள்: கடுமையான தொடர் புறத்திசுசெல் குறைபாடுகள் அல்லது புண்களுக்கு விழிப்பரப்புப் பராமரிப்பு தேவைப்படலாம். பல்வேறு முறைகளாவன:

1.   கருப்பைப் படல மேற்புற ஒட்டு

2.   மடல் வெண்படல சீரமைப்பு (பகுதி-தடிமன் வெண்படல மாற்றறுவை)

3.   இமை முறை: போட்டுலினம் நச்சுத் தூண்டல் இமையிறக்கம் அல்லது  பக்க இமைத்தையல் (இமைத் திறப்பைக் குறுக்க அறுவை முறையில் மேல் கீழ் இமை விளிம்பை இணைத்தல்)

4.   ஒட்டுதல்: குவிதல் வெண்படலத் துளைக்கு இது பொருத்தமாக இருக்கலாம்.

-    இமை அறுவை: AKC முற்றிய நிலையில் பரந்துபட்ட விழிப்பரப்பு மற்றும் இமை விளிம்பு வடுவுறலால் இமை அறுவை தேவைப்படும். இதில், இமை நிலை குறைபாட்டுக்கு இமை விளிம்பு இறுக்குதலும் சுழல் முறைகளும் அடங்கும். மேலும், கடும் இணைப்படல வடுவுறலுக்கு இணையிமை சிதைத்தலும் வளைவுப் புனரமைப்பும் தேவை.

-    கண்புரை அறுவை: ஒவ்வாமை மற்றும் ஊக்கமருந்து தூண்டல் கண்புரைக்காகப் பல நோயாளிகளுக்கு மிக இளம் வயதிலேயே கண்புரை அறுவை தேவைப்படலாம்.

-    கண்ணழுத்த அறுவை: ஊக்க மருந்து தூண்டிய கண்ணழுத்த நோய்க்கு கண்னழுத்தம் வடிகட்டல் அறுவை அல்லது அடைப்பிதழ் பொருத்துதல் சில நோயாளிகளுக்குத் தேவைப்படும்.

-    மூல செல் மாற்றுசிகிச்சை: படலச்சந்திப்பு மூல செல் குறைபாடுள்ள நோயாளிகளுக்குப் பார்வைப் புனரமைப்புக்காக விழிப்பரப்பு மூல செல் மாற்றமைப்பு சிகிச்சை தேவைப்படலாம்.

தொடர்புடைய மண்டல நோய்நிலைகளுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டும். பார்வைக்கு ஆபத்து ஏற்படுத்தும் கட்டுப்படுத்த முடியாத தோல் அழற்சிக்கு மண்டலம் சார் ஊக்க மருந்து தேவைப்படும்.

தொடர்புடைய சிற்றக்கி வெண்படல அழற்சிக்கு மேற்பூச்சு நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. திரும்பத்திரும்ப இது ஏற்பட்டால் மண்டலம் சார் நுண்ணுயிர்க் கொல்லிகளும் தேவைப்படும்.

நோய் முன் கணிப்பு:

AKC பல ஆண்டுகளுக்கு நீடிக்கும். சில வேளைகளில் முதுமையிலும் தொடர்ந்து பின் தானாகவே குணமடையலாம்.

தகுந்த நோய்த்தடுப்பு, சரியான சிகிச்சை மற்றும் திட்டமிட்ட அறுவை மருத்துவம் ஆகியவற்றால் குறை பார்வையையும் பார்வை இழப்பையும் தவிர்க்கலாம்.

AKC  பார்வையிழப்பை உருவாக்கும் ஆபத்தான  நோய். மேலோட்டமான புள்ளி வெண்படல அழற்சி, தொடர் வெண்படல  புறத்திசுசெல் குறைபாடுகள், வெண்படல வடு அல்லது மெலிவு, கண்புரை, வெண்படலக்கூம்பல், இமையிணை உருவாதால் ஆகியவற்றால் பார்வைக் குறைவை அல்லது பார்வை இழப்பை AKC ஏற்படுத்தும்.

விழிப்பரப்பு நோய் நிலைப்படும் வரை நோயாளியைக் கண்காணித்து வர வேண்டும். கோர்ட்டிக்கோஸ்டிராய்ட் அல்லது நோய்த்தடுப்பாற்றல் அடக்கல் மருந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் மருந்தினால் ஏற்படும் எதிர் விளைவுகள் குறித்து முறையாக சோதனை செய்து வர வேண்டும். கண்புரை, கண்ணழுத்தம் மற்றும் இரண்டாம்கட்ட வெண்படலத் தொற்றை கோர்ட்டிக்கோஸ்டிராய்டுகள் உருவாக்கும்.

AKC, பின்வரும் சிக்கல்கள்/அம்சங்களோடு தொடர்புடையதாக இருக்கலாம்:

-    இமையிறக்கம்

-    இமைவிளிம்புத் தடிப்பு

-    ஸ்டேபிலோகோக்கல் இமையழற்சி

-    இணைப்படல வளைவு முன்குறுக்கம்

-    வெண்படல நோய்

-    வெண்படலக் கூம்பல்

-    அடிக்கடி சிற்றக்கி வெண்படல அழற்சி

-    வெண்படல வடு

-    வெண்படல மெலிவு

-    வெண்படலத் துளை

-    ஒளிபுகும் விளிம்புச் சிதைவு

-    முன் சார்-பொதியுறைக் கண்புரை

-    பின் சார்-பொதியுறைக் கண்புரை

-    விழிப்பின்னறை சிதைவு மாற்றம்

-    விழித்திரை விடுபடல்

AKC யை நீண்ட நாட்களுக்குத் தடுக்கக், குறைக்க அல்லது ஒழிக்க சூழல் ஒவ்வாமையூக்கிகளைத் தவிர்க்க வேண்டும்.

ஊக்க செல் நிலைப்படுத்திகள் மற்றும் எதிர்ஹிஸ்ட்டமின்களே முக்கிய நோய்த்தடுப்பு மருந்துகள். சூழல் ஒவ்வாமை ஊக்கிகளைத் தவிர்ப்பதும், மேற்பூச்சு மற்றும் வாய்வழி எதிஹிஸ்ட்டமின்களை உள்ளெடுப்பதும் நோய் கூடுவதைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.

  • PUBLISHED DATE : Mar 28, 2016
  • PUBLISHED BY : Zahid
  • CREATED / VALIDATED BY : R. Davidson
  • LAST UPDATED ON : Mar 28, 2016

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.