குறைப்பிரசவம்

உலகம் முழுவதிலும் குறைப்பிரசவம் ஒரு குறிப்பிடத்தக்கப் பொது சுகாதாரப் பிரச்சினையாக இருக்கிறது. காரணம், இதனோடு தொடர்புடைய சிசு (பிறந்து முதல் 28 நாட்கள்) மரணமும், குறுகிய நீண்ட கால நோயும் பிற்கால வாழ்கையில் ஏற்படும் ஊனமும் ஆகும். ஒரு பெண்ணின் இறுதி மாதவிடாய் காலத்தின் முதல் நாளில் இருந்து கருவளர் காலமான 37 வாரங்கள் முழுமை பெறுவதற்கு முன் அல்லது 259 நாட்கள் நிறைவுபெறும் முன் உயிரோடு பிறந்த குழந்தைகளே குறைப்பிரசவக் குழந்தைகள் என்று உலக சுகாதார நிறுவனம் வரையறுக்கிறது. பொதுவாக பிரசவக் காலம் 40 வாரங்கள் ஆகும்.

உலக சுகாதார நிறுவனப் புள்ளி விவரப்படி உலகம் முழுவதும் ஆண்டுக்கு 15 மில்லியன் குறைப்பிரசவங்கள் நிகழுகின்றன. பிறக்கும் பத்து குழந்தைகளில் ஒன்றுக்கும் மேற்பட்டக் குழந்தைகள் குறைப்பிரசவமாகப் பிறக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் 1 மில்லியன் குழந்தைகள் குறைபிரசவத்தால் ஏற்படும் சிக்கல்களினால் மரணம் அடைகின்றன (2013). 184 நாடுகளில் பிறக்கும் குழந்தைகளோடு ஒப்பிடும் போது குறைப் பிரசவக் குழந்தைகளின் விகிதம் 5%-ல் இருந்து 18% வரை வேறுபடுகிறது. இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் பிறக்கும் 27 மில்லியன் குழந்தைகளில் 3.5 மில்லியன் குழந்தைகள் குறைப் பிரசவமாகப் பிறக்கின்றன (2010 தரவு).

5 வயதுக்கு உட்பட்ட அனைத்துக் குழந்தை மரணத்திலும் சிசு மரணம் (பிறந்து ஒரு மாதத்தில்) 40% ஆகும். உலக அளவில் சிசு மரணத்தின் முக்கிய காரணம் குறைப்பிரசவமே. மேலும், நிமோனியாவுக்கு அடுத்த படி, ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மரணத்தின் இரண்டாவது முக்கிய காரணமும் இதுவே.

பெருமூளை வாதம், உணர்வுக்குறைபாடுகள், கற்கும்திறன் குறைபாடுகள், சுவாச நோய்கள் போன்ற பல்வேறு குறைபாடுகளால் பிழைத்து வாழும் குறைப்பிரசவக் குழந்தைகள் பல துன்புறுகின்றன. குறைப்பிரசவத்தோடு தொடர்புடைய நோய்கள் பெரும்பாலும் பிற்கால வாழ்க்கையிலும் தொடருகின்றன. இதனால் தனிநபருக்கும் குடும்பத்துக்கும் உடல், உள, பொருளியல் அழுத்தங்கள் விளைகின்றன.

குறைப்பிரசவம் ஓர் உலகளாவியப் பிரச்சினை. இருப்பினும், 60 சதவிகித்த்துக்கு மேலான குறைப்பிரசவம் ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு ஆசியாவில் நிகழ்கிறது. குறைந்த வருமான நாடுகளில் சராசரியாக 12% குழந்தைகள் காலத்திற்கு முன் பிறக்கின்றன. உயர் வருமான நாடுகளில் இது 9% மாக உள்ளது. நாடுகளுக்குள் ஏழைக் குடும்பங்கள் அதிக ஆபத்தில் உள்ளன. எங்கு பிறக்கின்றன என்பதைப் பொறுத்தே குறைப்பிரசவக் குழந்தைகளின் உயிர்பிழைத்தலும் அமைந்துள்ளது. உயர்வருமான நாடுகளில் 10-ல் 9 குறைப்பிரசவக் குழந்தைகள் பிழைத்துக் கொள்ளுகின்றன. இதற்குக் காரணம் அடிப்படை கவனிப்பின் உயர் தரமும் விழிப்புணர்வுமே ஆகும். மாறாக, குறைந்த வருமான நாடுகளில் 10-ல் ஒரு குழந்தையே பிழைக்கிறது.

குழந்தைப் பேற்றின் போது அத்தியாவசியமான பராமரிப்பு, பிறப்புக்கு முன்னான ஊக்கமருந்து ஊசி (குழந்தைகளின் நுரையீரலைப் பலப்படுத்த வகுக்கப்பட்ட அளவுகோலின் படி குறைப்பிரசவ ஆபத்தில் இருக்கும் கர்ப்பிணிகளுக்கு அளிக்கப்படும் ஊசிமருந்து), கங்காரு தாய்ப் பராமரிப்பு போன்ற பிறப்புக்குப் பின்னான பராமரிப்பு (உடலோடு உடலாகத் தாய் குழந்தையை சுமத்தலும் அடிக்கடி தாய்ப்பாலூட்டுதலும்) மற்றும் தொற்றுக்கும் சுவாசப் பிரச்சினைகளுக்கும் அடிப்படை கவனம் ஆகிய மலிவான பராமரிப்புகள் மூலம் நான்கில் மூன்று பங்கு குறைப்பிரசவக் குழந்தைகளைப் பாதுகாக்க முடியும்.

பெண்களில் ஆபத்துக் காரணிகளை இனம் கண்டு பரமரிப்பை பேற்றுக்கு முன்னும், இடைப்பட்ட காலத்திலும், பேறுகாலத்திலும் மேம்படுத்துவதன் மூலமும், கர்ப்பத்தடைப் பொருட்களை சிறந்த முறையில் கிடைக்கச்செய்வதனாலும், அதிக வலிமை/கல்வி அளிப்பதன் மூலமும் குறைப்பிறப்பு விகிதத்தைக் குறைக்க முடியும்.

குறிப்புகள்:

www.who.int/topics/preterm_birth

apps.who.int/iris/bitstream/

www.who.int/mediacentre/

apps.who.int/iris/bitstream/

apps.who.int/iris/bitstream/

www.savethechildren.in/news

 

ஒரு பெண்ணின் இறுதி மாதவிடாய் காலத்தின் முதல் நாளில் இருந்து கருவளர் காலம் 37 வாரங்கள் முழுமை பெறுவதற்கு முன் அல்லது 259 நாட்கள் நிறைவுபெறும் முன் உயிரோடு பிறந்த குழந்தைகளே குறைப்பிரசவக் குழந்தைகள் ஆகும். கருவளர் காலத்தை அடிப்படையாகக் கொண்டு குறைப்பிரசவம் துணைவகைகளாகப் பகுக்கப்படுகின்றன:

 • மிக முந்திய குறைப்பிரசவம் (<28 வாரங்கள்)
 • முந்திய குறைப்பிரசவம் (28 -  <32 வாரங்கள்)
 • மிதமானதில் இருந்து பிந்திய குறைப்பிரசவம் (32 - <37 வாரங்கள்)

கருவளர்ச்சி காலத்தைக் கண்டறியும் பல்வேறு முறைகள்-

 • ஆரம்பக் கேளாவொலி சோதனை: கருவளர்ச்சி காலம் 6-18 வாரங்களில் கருவின் தலைப்பிட்ட நீளம், தலையின் குறுக்குவெட்டு விட்டம்/தொடை எலும்பு நீளம் மதிப்பீடு.
 • கருப்பை உயரம்: இடுப்பெலும்பு இணைப்பில் இருந்து அடி வரை உயரம்.
 • இறுதி மாதவிடாய்: இறுதி மாதவிடாயின் முதல் நாளை பெண் நினைவு கூருதல்.
 • சிசு பரிசோதனை: புற +/அல்லது நரம்பியல் பரிசோதனையைப் பயன்படுத்தி பெற்ற உறுதிப்படுத்தப்பட்ட மதிபீட்டெண்கள்.
 • சிறந்த மகப்பேற்றியல் கணிப்பு: பொதுவாக, கூடுதல் வருமானம் உள்ளோருக்கு அளிக்கப்படும் பராமரிப்பின் மூலம் கிடைக்கும் சிறந்த தகவலின் அடிப்படையில் ஒரு வழிமுறையைப் பயன்படுத்தி கருவளர்ச்சி காலத்தைக் கணித்தல்.

குறைப்பிரசவ அறிகுறிகள்:

பொதுவாகக் குறைப்பிரசவம் எதிர்பாராத விதமாகத் தொடங்கும்; காரணம் தெரியாது. இதன் அறிகுறிகள்:

 • யோனிக் கசிவில் மாற்றம் (யோனியில் இருந்து வெளிப்படும் கசிவு அல்லது இரத்தம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கும்)
 • இறுக்கம் (வயிறு முட்டியைப் போல் இறுகும்): பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை அல்லது அதைவிட அதிகமாக.
 • இடுப்பு அழுத்தம்: குழந்தை கீழ் நோக்கி தள்ளுவது போல் உணர்வு.
 • குறைந்த மந்தமான முதுகு வலி.
 • மாதவிடாய் போல் உணர்வைத் தரும் தசைப் பிடிப்பு.
 • வயிற்றுப் போக்குடன் அல்லது இல்லாமல் வயிற்றுச் சுளுக்கு.

குறிப்புகள்:

  apps.who.int/iris/bitstream/

   www.who.int/mediacentre/f

  www.cdc.gov/reproductivehealth/

www.acog.org/~/media/

குறைப்பிரசவம் ஒரு நோய்த்தாக்கம் ஆகும். இதற்குப் பல்வேறு காரணங்கள் உண்டு. அவற்றை இரு பெரும் வகைகளாகப் பிரிக்கலாம்:

(1)   தானாகவே நிகழும் குறைப்பிரசவம்; தானாகவே பிரசவம் ஏற்பட்டு அல்லது பிரசவத்துக்கு முன் படலங்கள் கிழிவதைத் தொடர்ந்து நிகழும். பாதிக்கு மேற்பட்ட நேர்வுகளில் இதற்குக் காரணத்தை இனங்காண முடியாது.

(2)   செயற்கையான குறைப்பிரசவம்: கருவளர்ச்சி காலம் 37 மாதங்கள் முழுமை பெறாமல் இருக்கும்போது தாய் அல்லது கருவின் குறிப்பால் (அவசரம் அல்லது விருப்பம்) அல்லது பிற மருத்துவ ரீதியற்ற காரணங்களால் தூண்டப்படும் அல்லது அறுவைமூலம் செய்யப்படும் பிரசவம் என இது வரையறுக்கப்படுகிறது.

பெரும்பான்மையான குரைபிரசவம் தானாகவே நிகழும். ஆனால் சில மருத்துவ அல்லது மருத்துவ ரீதியற்ற காரணங்களுக்காகத் தூண்டப்படுவன அல்லது அறுவை முறையால் செய்யப்படுவன ஆகும்.

ஏறக்குறைய 45-50% குறைப்பிரசவம் காரணம் அறியப்படாதவை. 30 காலம் தவறிய படலக் கிழிவால் ஏற்படுவன. 15-20% மருத்துவ ரீதியாகத் தூண்டப்படுவன அல்லது அறுவை முறையால் செய்யப்படுவன ஆகும்.

குறைப்பிரசவத்துக்கான ஆபத்துக் காரணிகள்:

 • கர்ப்பத்தின் போது வயது: இளம் வயதுக் கர்ப்பம் மற்றும் அதிகரித்தத் தாய் வயது
 • முந்திய குறைப்பிரசவங்கள்
 • ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட பிரசவம் (உ-ம். இரட்டை, மூன்று குழந்தைகள்)
 • நீரிழிவு மற்றும் மிகை இரத்த அழுத்தம் போன்ற நீடித்த நிலைகளும் தொற்றுக்களும்
 • மரபியல் தாக்கம்
 • ஊட்டச்சத்து: ஊட்டச்சத்துக் குறைவு, உடல் பருமன், பலசத்துக் குறைபாடு.
 • வாழ்க்கை முறை: புகைக்கும், மது அருந்தும் அல்லது போதைப் பொருட்களைப் பயன்படுத்தும் பெண்களுக்குக் குறைப்பிரசவ ஆபத்து அதிகம். ஏதாவது ஒரு காரணத்தால் ஏற்படும் மனவழுத்தம், அதிக உடல் உழைப்பு, அதிக நேரம் நின்று கொண்டு இருத்தல் ஆகியவை குறைப்பிரசவ ஆபத்தை அதிகரிக்கும்.

இருப்பினும் பெரும்பாலும் காரணத்தை இனம் காண முடியாது.

குறிப்புகள்:

www.who.int/mediacentre/factsheets

www.who.int/features

apps.who.int/iris/bitstream

இதுநாள் வரை, குறைப்பிரசவத்தைத் துல்லியமாகக் கண்டறியும் ஒரே சோதனையோ தொடர் மதிப்பீட்டு முறைகளோ இல்லை. குறைப்பிரசவத்தை முன்கண்டறியப் பயன்படுத்தப்படும் மருத்துவ, உயிரியற்பியல் மற்றும் உயிர்வேதியல் சோதனைகள் வருமாறு:

உயிரியற்பியல் கணிப்புகள்:

 • கர்ப்ப காலத்தில் கருப்பைச் சுருக்கத்தைக் கண்காணித்தல்: தாயின் சுய அறிதல், மருத்துவர் அறிதல் மற்றும் மின்னியல் கண்காணிப்பு.
 • கருப்பைக் கழுத்துச் சோதனை:

o   கருப்பைக் கழுத்தின் திறப்பு, மென்மை, திண்மை, இருப்புநிலை மற்றும் கருவின் தலை இருப்புநிலை ஆகியவைக் கைப்பரிசோதனையால் கண்டறியப்படும். கருப்பைக் கழுத்துத் திறப்பும் மென்மையும் குறைப்பிரசவ ஆபத்தோடு தொடர்புடையது.

o   ஒலிவரைவியல் மதிப்பீடு: உட்கருப்பைக் கேளாவொலி சோதனையின் மூலம் அறியப்படும் கருப்பைக் கழுத்து நீளக் குறைவும் குறைப்பிரசவ ஆபத்தோடு தொடர்புடையது.

கரு பைப்ரோநெக்டினை, யோனி கசிவில் அளக்கலாம். இந்தப் புரதம் இருப்பது குறைப்பிரசவத்தோடு தொடர்பு கொண்டது ஆகும்.

குறைப்பிரசவக் குழந்தைகளுக்கான சோதனைகள்:

 • இதய-சுவாசக் கண்காணிப்பு: குழந்தையின் இதயத் துடிப்பும் மூச்சும் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.
 • பாய்ம உள்ளெடுப்பும் வெளியேற்றமும் குறைந்த எடையுள்ள குறைப்பிரசவக் குழந்தைகளில் பாய்மத் தேவையைத் தீர்மானிக்க கண்காணிக்கப்பட வேண்டும்.
 • இரத்தப் பரிசோதனைகள்: முழு இரத்தக் கணக்கீடு, இரத்த வெள்ளணுக்கள் எண்ணிக்கை, இரத்த வகை, எதிர்பொருள் சோதனை (கூம்ப்ஸ் சோதனை), ஊனீர் சோடியம், பொட்டாசியம், கால்சியம், குளுக்கோஸ் மற்றும் பிலிருபின் அளவு குழந்தையின் இரத்தத்தில் இருப்பதை அறிய சோதனை செய்யப்படுகிறது.
 • மின்னொலி இதய வரைவு: குழந்தையின் இதய அமைப்பு மற்றும் செயல்பாடு குறித்து அறிய நடத்தப்படும் இதயக் கேளாவொலி சோதனை.
 • கேளாவொலி வரைவு: மூளை இரத்தக் கசிவு, பாய்மத் திரட்சி, அல்லது இரைப்பைக்குடல் பாதை, கல்லீரல் அல்லது சிறுநீரகம் போன்ற வயிற்று உறுப்புகளில் பிரச்சினைகள் உள்ளனவா என்று அறிய கேளாவொலி வரைவுகள் எடுக்கப்படுகின்றன.
 • கண் பரிசோதனை: விழித்திரையில் உள்ள பிரச்சினைகளை அறிய (குறைப்பிரசவ விழித்திரைநோய்) ஒரு கண் மருத்துவர் குழந்தையின் கண் மற்றும் பார்வைத் திறனை சோதனை செய்யலாம்.

குழந்தைக்கு வேறு ஏதாவது சிக்கல்கள் ஏற்பட்டால் பிற சிறப்பு சோதனைகள் தேவைப்படும்.

குறிப்புகள்:

www.ncbi.nlm.nih.gov

www.acog.org/

www.healthline.com/

கர்ப்பகாலத்திலும் குழந்தைப் பேற்றிலும் பெண்களுக்கும், பிறந்த (குறைப்பிரசவ) குழந்தைக்கும் சிறப்புக்கவனம் செலுத்துவது குறைப்பிரசவ மேலாண்மையில் அடங்கும்.

() கர்ப்ப காலத்திலும் பேற்றின் போதும் கவனம்:

சில பெண்களுக்குக் குறைப்பிரசவ ஆபத்து இருக்கும். இதைக் கீழ்வரும் காரணிகளை அடிப்படையாகக் கொண்டு பேற்றுக்கு முன்னான வருகையின் போது இனங்காணலாம்:

 • பேற்று வரலாறு (உ-ம். அறிந்த யோனி அல்லது கருப்பைக் கழுத்து பிரச்சினைகள் அல்லது முந்திய குறைப்பிரசவம்.
 • பிரசவ இயல்புகள் வெளிப்பாடு (உ-ம். கர்ப்பகால இரத்த மிகை அழுத்தம், நீரிழிவு, பன்கரு வளர்ச்சி, இரத்தக் கசிவு).
 • இளம் வயதினர்

குறைபிரசவம் ஏற்படக்கூடிய ஆபத்துள்ள பெண்கள் தங்கள் பேறுகாலத்தைத் தாய்க்கும் சேய்க்கும் சிறப்பான உயர் வசதிகள் உள்ள மருத்துவ மனையில் வைத்துக்கொள்ள வேண்டும். இத்கைய மருத்துவ மனைக்குக் குழந்தை கருவில் இருக்கும் போதே ஆலோசனைக்குச் சென்றுவிட வேண்டும்.

குறைப்பிரசவ வலி ஏற்பட்டு விட்டால் பிரசவத்தை நீட்டிக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், குழந்தை பிழைத்துக்கொள்ள வழிவகைகளை உருவாக்கவும் சிகிச்சை முறைகள் உள்ளன. கருப்பைச் சுருக்கத்தைத் தடுத்து பிள்ளைப்பேற்று வலியை அழுத்தி பிரசவ காலத்தை நீட்டிக்கும் பேற்று மருந்துகள் (உ-ம். ஆக்சிடாசின், ஆன்டகோனிஸ்டுகள், பெட்டாமிமெட்டிக்ஸ், கால்சியம் சேனல் தடுப்பிகள், மக்னீசியம் சல்பேட்).

கர்ப்ப காலத்தில் அளிப்பதால் குறைப்பிரசவக் குழந்தையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய பிற மூன்று மருந்துகள்: பிறப்புக்கு முன்னான கோஸ்ட்டிகோஸ்டிராய்டுகள், பிரசவ வலிக்கு முன்னான முதிராப் படல கிழிவுக்கு அளிக்கப்படும் நுண்ணுயிர்க்கொல்லிகள் மற்றும் மக்னீசியம் சல்பேட்டு.

·         பிறப்புக்கு முன்னான கோஸ்ட்டிகோஸ்டிராய்டுகள்: 34 வாரங்கள் கர்ப்பகாலம் முழுமை அடையும் முன்னர் குறைப்பிரசவ வலி ஏற்படும் பெண்களுக்கு குழந்தையின் நுரையீரல்களின் வளர்ச்சியை வேகப்படுத்த ஊக்கமருந்து ஊசி இட வேண்டும். குறைப்பிரசவம் ஏற்படும் அதிக ஆபத்தில் உள்ள பெண்களுக்கு (23 வாரங்களுக்கு முன்) பிறப்புக்கு முன்னான கோஸ்ட்டிகோஸ்டிராய்டுகள் அளிக்கும்போது, குறைப்பிரசவக் குழந்தை இறக்கும் ஆபத்தையும், சுவாசக் கோளாறுகளையும், வளர்ச்சிப் பிரச்சினைகளையும் குறைக்கலாம்.

·         பிரசவ வலிக்கு முன்னான முதிராப் படல கிழிவு (PPROM): பனிக்குடப் படலத் தொற்றோடு தொடர்புடையதே முதிராப் படலக் கிழிவாகும். இதனால் குறைப்பிரசவமும், பெருமூளை வாதம் மற்றும் நீடித்த நுரையீரல் நோய் போன்ற  பிற கருப்பிரச்சினைகளும் ஏற்படலாம்.  PPROM-க்கு நுண்ணுயிர்க்கொல்லி சிகிச்சை அளிக்கும் போது பிரசவ வலி 48 மணி நேரம் தள்ளிப் போவதோடு பிறந்த குழந்தைத் தொற்றைக் குறைக்கும்.

(அமாக்சிசிலின் மற்றும் கிளவுலானிக் அமிலச் சேர்க்கை (கோ-அமாக்சிகிளாவ் போன்றவை) குறைப் பிரசவ ஆபத்தில் இருக்கும் பெண்களுக்கு அளிக்கக் கூடாது. ஏனெனில் பிறந்த குழந்தைப் பெருங்குடல் திசு இறப்பு ஆபத்தில் இதில் அதிகம்*).

·         மக்னீசியம் சல்பேட்டு பயன்பாடு: 32 வாரங்களுக்கு முன் குறைப்பிரசவமாகக் குழந்தை பிறக்கும் ஆபத்துள்ள பெண்களுக்கு மக்னீசியம் சல்பேட்டு கொடுப்பதால், குழந்தையின் மூளை பாதுகாக்கப்படுவதோடு, பெருமூளை வாத விகிதம் குறைகிறது, மற்றும் பிறந்த குழந்தையின் நீடித்த ஆரோக்கியத்துக்கு வழிகோலுகிறது.

(ஆ) குறைப்பிரசவக் குழந்தைக்கு சிறப்புப் பராமரிப்பு:

குறைப்பிரசவக் குழந்தைக்கு தனிக்கவனம் தேவைப்படுவதன் காரணம்:

தாயின் கருப்பைக்கு வெளியில் உலகத்தில் வாழும் வகையில் குறைப்பிரசவக் குழந்தைகள் முழுமையாக உருவாவதில்லை. எனவே அவை கதகதப்பாக இருக்கவும் வளரவும் பிற குழந்தைகளைப் போலவே பின்வரும் சவால்களை மேற்கொள்ளத் தனிக்கவனம் தேவைப்படுகிறது:

கதகதப்பாக வைத்தல்:

குறைப்பிரசவக் குழந்தைகள் எளிதில் உடல் வெப்பத்தை இழக்கும். இதனால் குறைவெப்பக் கோளாறு ஏற்படும். இதனால் கதகதப்பாக இருக்கவும் வளரவும் அவற்றிற்கு அதிக சக்தியும் கவனமும் தேவைப்படுகின்றன. பிறந்த உடனேயே குழந்தைகளைக் கதகதப்பாக வைத்திருக்க வேண்டும். அவற்றை முழுமையாக உலர்த்தி தாயின் வயிற்றில் வைக்க வேண்டும். தொப்புள் கொடியைப்  பிடிகருவியால் பற்றி வெட்டியபின் மூச்சு இயல்பாக இருந்தால் தோலோடு தோலாகக் குழந்தையை  முதல் தாய்ப்பாலூட்டும் வரையும் அதன் பின்னரும் அதன்  தாயின் நெஞ்சில் இட வேண்டும். உடனடியாகக் குளிப்பாட்டக் கூடாது.

சுவாசித்தல்:

குறைப்பிரசவக் குழந்தைகளின் நுரையீரல்கள் முழுமையாக உருவாகி இருப்பதில்லை.  பரப்பியங்கி (நுரையீரல் விரிவடைய உதவும் ஒரு பொருள்) குறைவுபடும். பல குறைப்பிரசவக் குழந்தைகள் பிறந்தவுடன் தாமே சுவாசிக்கத் தொடங்கும். ஆனால் சில குழந்தைகளுக்கு சுவாசமூட்ட வேண்டி இருக்கும் (சிசு சுவாசமூட்டல் அல்லது பை மற்றும் முகமூடி கொண்டு செயற்கை சுவாசம் அளித்தல்). சுவாசப் பிரச்சினை நீடித்தால் குழந்தைகளுக்கு  இயந்திரம் மூலமும்  கூடுதல் உயிர்வளி கொண்டும் கூடுதல்  சுவாசம் அளிக்க வேண்டும். சிலவேளைகளில், சில குறைப்பிரசவக் குழந்தைகள் சுவாசிக்க ஆரம்பித்துப் பின் தாமே  சுவாசிக்கும் சக்தி அற்று சுவாசிக்க முடியாமல் போகலாம். அத்தகையக் குழந்தைகளுக்கு தொடர் கவனிப்பு அவசியம்.

உணவூட்டல்:

பாலைச் சப்பி உட்கொள்ளும் அனிச்சை செயல் குறைப்பிரசவக் குழந்தைகளுக்கு முழுமையாக வளர்ச்சி அடையாமல் இருப்பதால் உணவளிக்க அவைகளுக்குக் கூடுதல் முயற்சி தேவை. குறைப்பிரசவக் குழந்தைகளுக்கு தாய்ப்பாலே  சிறந்த ஊட்டச்சத்து. பிறந்த உடன் முடிந்த அளவு உடனடியாகக் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஊட்ட வேண்டும். சப்பிக் குடிக்க இயலாத குழந்தைகளுக்குத் தாய்ப்பாலைக் கரண்டி, கோப்பை  அல்லது மூக்குக் குழல் வழியாக அளிக்கலாம். முழு வளர்ச்சிக் குழந்தைகள் போலவே குறைப்பிரசவக் குழந்தைகளுக்கும் தாய் பாலூட்டலே சிறந்தது.

தொற்றுக்கள்:

குறைப்பிரசவக் குழந்தைகளின் தடுப்பாற்றல் மண்டலம் முற்றிலுமாக உருவாகாத காரணத்தால் தொற்று நோய்  எளிதாகப் பற்றும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு தொற்று நோய் பற்றுமானால் அவர்களது உயிருக்கு ஆபத்து அதிகம்.

தொற்றில் இருந்து குறைப்பிரசவக் குழந்தைகளைப் பின்வருமாறு பாதுகாக்கலாம்:

 • கையுறையும் தொப்புள் கொடியை வெட்டப் பயன்படுத்தப்படும் கத்தியும்  இடுக்கியும் கிருமி நீக்கம் செய்யப்பட வேண்டும்.
 • தாயையும் சேயையும் தொடும் எவரும் தங்கள் கைகளைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
 • தேவைப்பட்டால் மட்டுமே மருத்துவப் பரிசோதனையும் நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்.
 • தொற்றுள்ள குழந்தைகளுக்கு நுண்ணுயிர்க் கொல்லிகளால் சிகிச்சை அளிக்க வேண்டும்.

மூளை:

பிறந்த உடனும் பிறந்து சில நாட்களுக்கும் குறைப் பிரசவக் குழந்தைகளுக்கு மூளையில் இரத்தம் கசியும் ஆபத்துள்ளது. உயிர்வளிக் குறைபாட்டினாலும் மூளைக்காயம் ஏற்படும். இரத்தக் கசிவு அல்லது உயிவளிக் குறைபாட்டால் பெருமூளை வாதம், வளர்ச்சி தாமதம் மற்றும் கற்றலில் சிரமம் ஏற்படலாம்.

கண்கள்:

விழித்திரையில் அசாதாரண இரத்தக் குழல் வளர்ச்சி ஏற்படுவதால் குறைப்பிரசவக் குழந்தையின் கண்களில் சிதைவு ஏற்படலாம். மிகு குறைப் பிரசவக் குழந்தைகளில் மிகவும் அதிக அளவில் உயிர்வளி அளிப்பதனால் நிலை மிகவும் கடுமையாக இருக்கும். இதனால் பார்வைக் குறைபாடும் பார்வை இழப்பும் உண்டாகக் கூடும்.

சிக்கல் உள்ள குறைப்பிரசவக் குழந்தைகள் பராமரிப்பு:

கூடுதல் சிக்கல்களிக் கொண்ட சிசுக்கள் பிறந்த குழந்தை பரமாரிப்புப் பிரிவுகளில் (NICU) வைத்துப் பராமரிக்கப்பட வேண்டும். ஆபத்தான ஆரோக்கியப் பிரச்சினைகள் கொண்ட பிறந்த குழந்தைகளுக்கு NICU-வில் சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது.  குறைப் பிரசவக் குழந்தைகளுக்குக் கதகதப்பு அளிக்கவும், சீரான சுவாசம் அளிக்கவும், உணவூட்டவும் அல்லது மிகவும் நோய்வாய்ப்பட்ட குழந்தைகளைக் கவனிக்கவும் தேவைப்படும் கூடுதல் பராமரிப்பு அவர்களிடம் உள்ளது. இதற்கான பிரத்தியேகமான சாதனங்களும் 24 மணி நேரமும் தனிக்கவனம் செலுத்தச் சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவர்களும் செவிலியரும் உண்டு.

குறைப் பிரசவக் குழந்தைகளுக்கு (மற்றும் குறை எடை கொண்ட காலம் நிறைவுற்றுப் பிறந்த குழந்தைகள்) கூடுதல் கதகதப்பும் உணவுண்ண உதவியும் தேவைப்படுகின்றன. இவைகளுக்கு வேறு பிரச்சினைகள் இல்லை என்றால் (இயல்பான இதயத் துடிப்போடு சுவாசம்) கங்காரு தாய் பராமரிப்பு ஒரு நல்ல உத்தியாகும்.

கங்காரு தாய்ப் பராமரிப்பு:  கூடுதல் நேர அளவுக்குக் குழந்தையை ஒருவரின் மார்பில் (குறிப்பாகத் தாய்) தோலோடு தோல் ஒட்ட அணைத்து  வைத்துக் கொள்ளுதல். தாயின் மார்பில் இரவும் பகலும் தாயின் பின்புறம் கட்டப்படும் ஒரு துணி மூலம் வைக்கப்படும். இதன் மூலம் ஒரு குறைப் பிரசவக் குழந்தைக்கு  தேவைப்படும் கதகதப்பு, அடிக்கடி தாய்ப்பால், தொற்றில் இருந்து பாதுகாப்பு, உந்துணர்வு, பாதுகாப்பு மற்றும் அன்பு கிடைக்கிறது. இது தாய்க்கும் சேய்க்கும் இடையில் இருக்கும் பிணைப்பை அதிகரிக்கிறது.

குறிப்புகள்:

apps.who.int/iris/bitstream

hwww.who.int/features

www.who.int/features/qa

/www.who.int/features/qa

apps.who.int/rhl/pregnancy_

குறைப்பிரசவக் குழந்தைகள் முழுமையாக வளர்ச்சி அடையாதலால் கீழ்க்காணும் பல்விதமான சிக்கல்களால் அவர்கள் துன்புறக் கூடும்:

சுவாசத் தடை நோய்த்தாக்கம்  (RDS): குறைப்பிரசவக் குழந்தைகளின் நுரையீரல்கள் வளர்ச்சி குன்றி இருக்கும். நுண்குழல்களில் பரப்பூக்கி குறைவாக இருக்கும். இதனால் குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறுகள் ஏற்படலாம். 32 வாரங்கள் முழுமை பெறாத குழந்தைகளுக்கு இக்கோளாறு உண்டாகும் ஆபத்து அதிகம். குறைப்பிரசவ ஆபத்து அல்லது குறைப்பிரசவ வலியில் இருக்கும் தாய்மாருக்கு பிறப்புக்கு முன்னான கோர்ட்டிகோஸ்டிராயிடு ஊசிகள் இடுவதன் மூலம் இந்த ஆபத்தைக் குறைக்கலாம்.

உணவூட்டல் சிரமங்கள்:  பொதுவாகச் சப்பி விழுங்கும் செயல்பாடு கருவுற்று 32 வாரங்கள் கழித்தே உருவாகுமாதலால் குறைப்பிரசவக் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்படலாம். உணவுண்ண அவைகளுக்கு உதவி தேவைப்படும்.

மஞ்சள் காமாலை: இது குறைப்பிரசவக் குழந்தைகளில் பரவலாகக் காணப்படும்.  இதற்குக் காரணம் அவற்றின் கல்லீரலால்  பித்தசெம்பசையை எளிதாக வளர்சிதை மாற்றம் செய்ய இயலாது. மஞ்சள் காமாலை ஏற்பட்டால் குழந்தையின் மூளைக்குப் பெரும் அபாயம் உண்டு. ஏனெனில் குறைப்பிரசவக் குழந்தைகளில் மூளை-இரத்தத் தடுப்பு சரிவர உருவாவதில்லை.

கடும் தொற்றுக்கள்: நோய்த்தடுப்பு மண்டலம் சரிவர உருவாகாத காரணத்தால் ஏற்படும் தொற்று நோய்களே குறைப்பிரசவக் குழந்தை இறப்புக்கு முக்கிய காரணம்.

மூளைக்காயம்:  பிறப்பில் அல்லது பிறந்து சில நாட்களில் மூளையில் ஏற்படும் இரத்தக் கசிவாலும், உயிர்வளி குறைவால் உண்டாகும் மூளைக் காயத்தாலும் பெருமூளை வாதம், வளர்ச்சிக் குன்றல் மற்றும் கற்றல் சிக்கல்கள் உருவாகும்.

குடல்திசுச் சிதைவு: இதில் குழந்தையின் குடல் சுவர்கள் பாதிப்படைகின்றன. தாய்ப்பாலை மட்டும் குடிக்கும் குழந்தைகள விட உருவாக்கப்படும் செயற்கை உணவை உண்ணும் குழந்தைகளுக்கு ஆபத்து அதிகம்.

குறைப்பிரசவ விழித்திரை நோய்: விழித்திரையைச் சுற்றி இரத்தக் குழல்கள் அசாதாரணமாக  வளர்வதே இதற்குக் காரணம். உயிர்வளி அதிகமாக கொடுக்கப்பட்டால் இது இன்னும் கடுமையாகப் பாதிக்கும்.

குறைப்பிரசவ இரத்தச்சோகை: எலும்பு மச்சை வளர்ச்சி அடையாமல் இருப்பதால்  சிவப்பணுக்கள் உற்பத்தி தாமதமாகும். பிறந்து சில வாரங்களில் இது தெளிவாகத் தெரியும்.

குறிப்புகள்:

www.who.int/f

குறைப்பிரசவத்தைத் தடுத்தல்குறைப் பிரசவங்களைக் குறைக்க, கர்ப்ப காலத்திலும் அதற்கு முன்னும் பின்னும், பராமரிப்பின் தரத்தை மேம்படுத்த வேண்டும்.  இதன் மூலம் குறைப்பிரசவ விளைவுகளை மேம்படுத்தலாம். குறைபிரசவக் குழந்தைகளை கவனமாகப் பராமரிப்பதன் மூலம் மரணத்தையும் ஊனத்தையும் குறைக்கலாம்.

கருவுருவாகுவதற்கு முந்திய ஆரோக்கியமும் கர்ப்பமாவதற்கு முந்திய பராமரிப்பும்:

கருவுருவாதற்கு முந்திய ஆரோக்கிய நிலை குழந்தைப் பேற்றில் சாதகமற்ற நிலையை உருவாக்கும் ஆபத்தைப் பல பெண்கள் அறிந்திருப்பதில்லை. பெண்களுக்கும் தம்பதியர்க்கும்  கர்ப்பத்திற்கு முன்னும் பின்னும் அளிக்கும் பராமரிப்பால் தாயும் சேயும் ஆரோக்கியமாகத் திகழும் வாய்ப்பை மேம்படுத்துகிறது.

கருவுருவதற்கு முன்னான காலகட்டத்தில்,  பின் வரும் காரணிகளை/தீர்வுகளை பின்பற்றுவதால் கர்ப்பிணியின் ஆரோக்கியம் மேம்பட்டு அதனால் குறைப்பிரசவமுன் தவிர்க்கப்படலாம்.

 • இளம்பருவக் கர்ப்பத்தைத் தவிர்க்கவும்.
 • கர்ப்பத்துக்கு முந்திய எடையை மேம்படுத்தல்: கர்ப்பத்துக்கு முன் குறை எடையோடு (உடல் நிறை அட்டவணை 18.5 கிகி/மீ2 –க்குக் குறைவு) இருக்கும் பெண்களுக்கு குறைப்பிரசவம் அல்லது குறையிடை குழந்தை பிறப்பு அபாயம் உள்ளது. அதிக எடை அல்லது உடல் பருமனான (உடல் நிறை அட்டவணை 25 கிகி/மீ2 –க்குக் கூடுதல்) பெண்களுக்கு குறைப்பிரசவ ஆபத்து அதிகம்.
 • எடையையும், இதயநலத்தையும் மேம்படுத்த ஆரோக்கிய உணவை உண்ணுதல், மற்றும் தினசரி உடல் செயல்பாடுகள் ஆகியவற்றை மேற்கொண்டால் கருவளர்ச்சி காலத்தில் மிகை எடை தொடர்பான சிக்கல்களைக் குறைக்கும்.
 • நுண்ணூட்டச் சத்துக்கள் மூலம் முக்கிய  உணவுகளை செறிவூட்டல்: பன்னுயிர்ச் சத்துக்களை (ஃபோலிக் அமிலம் போன்றவை) கூடுதலாக அளிக்கும்போது பிறவி குறையாக்க (உ-ம். நரம்புக் குழாய் குறைபாடுகள், பிறவி இதய நோய்கள், சிறுநீர்ப்பாதை மற்றும் அவயவக் குறைபாடுகள்)  ஆபத்துகள் குறையலாம். மேலும், முன்சூல்வலிப்பு அபாயத்தையும் குறைக்கிறது. இதனால் குறைப்பிரசவ அபாயமும் குறைகிறது.
 • பால்வினைத் தொற்றுக்களை தடுத்தல் மற்றும் அவற்றிற்கு சிகிச்சை பெறுதல் (மேலும் விவரங்களுக்கு: www.nhp.gov.in)
 • புகையிலை பயன்படுத்துதல், புகைத்தல் மற்றும் பிறர்புகைக்கும் புகை ஆகியவற்றைத்  தவிர்த்து வாழ்க்கை முறை ஆபத்துக் காரணிகளைக் கையாள வேண்டும்.
 • இரத்த மிகை அழுத்தம், நீரிழிவு போன்ற நீடித்த நோய்களைப் பரிசோதித்துக் கண்டறிந்து கட்டுப்படுத்துதல்.
 • குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் தடுப்பு மருந்து அளிப்பதை ஊக்குவித்தல்.
 • குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம், சுகாதாரக் கல்வி மற்றும் பெண்களுக்கு அதிக வலிமை அளித்தல் ஆகியவற்றைப் பயன்படுத்தி திட்டமிடாத கர்ப்பத்தைத் தடுத்தல் மற்றும் குழந்தைகளுக்கு இடையிலான இடைவெளியை கூடியமட்டும் அதிகரித்தல்.
 • மனக் கோளாறுகளைப் பரிசோதித்து, கண்டறிந்து கையாளுதல்; தாம்பத்திய வன்முறை மற்றும் மனச்சோர்வு, சமூகப் பொருளியல் சிரமங்கள் போன்ற தாய்சார் அழுத்தங்களைத் தடுத்தல்.

கர்ப்பகாலக் கவனிப்பு:

அனைத்து பெண்களுக்கும் குறைப்பிரசவ விகிதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் பிறப்புக்கு முன்னான பராமரிப்பு அம்சங்கள் வருமாறு:

 • அதிக அளவில் குறைப்பிரசவ ஆபத்துள்ள பெண்களை இனங்காணுதல்:  கர்ப்பகால பராமரிப்பின் போது பேற்று வரலாற்றை அடிப்படையாக்க் கொண்டு (உ-ம்: கருப்பை அல்லது கருப்பை வாய்க் குறை அல்லது முந்திய குறைப்பிரசவம்), அல்லது கர்ப்பகால  இயல்பு வெளிப்பாட்டை வைத்து (மிகை இரத்த அழுத்தக் கோளாறு, நீரிழிவு, பல கரு வளர்ச்சி, இரத்தப் போக்கு). இளம் பெண்களுக்கு ஆபத்து அதிகம்.
 • பால்வினை மற்றும் பிற தொற்று சோதனை (காசநோய், மலேரியா, யோனி நுண்ணுயிர் தொற்று, சிறுநீர் நுண்ணுயிர் தொற்று).
 • ஊட்டச்சத்துக் குறைவைக் கண்டறிந்து சரிசெய்தல் மற்றும் சத்துணவு பற்றிய ஆலோசனை.
 • பேறுகாலத்திற்கு ஆயத்தமாதல் பற்றிய ஆலோசனை; குறைப்பிரசவம் மற்றும் பிற ஆபத்துகளுக்கு முன்னெச்சரிக்கை பற்றிய ஆலோசனை.
 • புகைத்தல், மறைமுகப் புகை, போதை, மனச்சோர்வு, மனவழுத்தத்தை நீக்குதல்  மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை (இணையருக்குள்ளான வன்முறை) போன்ற  வாழ்க்கைமுறை ஆபத்துக் காரணிகளுக்கு நடத்தையியல் மற்றும் சமுதாய ஆதரவு குறித்த ஆலோசனை.

குறைப்பிரசவக் குழந்தையின் நலத்தை மேம்படுத்த குறைப்பிரசவ வலியின் போது பெண்களைப் பராமரித்தல்:

குறைப்பிரசவ ஆபத்துள்ள அ ல்லது குறைபிரசவ வலி ஏற்பட்ட பெண்களை தாய்க்கும் சேய்க்கும் சிறந்த பராமரிப்பு வசதிகள் கொண்ட மருத்துவ மனைக்குப் பரிந்துரை செய்ய வேண்டும்.

வலி ஏற்பட்ட உடன் பெண்கள் மருத்துவ மனைக்கு செல்ல வேண்டும். குறைப்பிரசவ  வலி ஏற்பட்டவுடன் பிரசவத்தை நீட்டிக்கவும் விளைவுகளை மேம்படுத்தவும் குழந்தையைக் காப்பதற்கும் சிகிச்சைகள் உள்ளன.

 • கர்ப்ப காலத்தை நீட்ட வல்ல சிகிச்சையில் கருப்பை சுருங்குவதைத் தடுத்து வலியைக் குறைக்கும் பேற்று மருந்துகள் உள்ளன (உ-ம். ஆக்சிடாசின் ஆண்டகோனிஸ்ட்டுகள், பீட்டாமிமெடிக்குகள், கால்சியம் சானல் புரோக்கர்கள், மக்னீசியம்  சல்பேட்).
 • குறைப்பிரசவக் குழந்தகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த கர்ப்ப காலத்தில் அளிக்க வேண்டிய மூன்று மருந்துகள் உள்ளன: ஆண்டிநேட்டல் கோர்ட்டிகோஸ்டிராய்டுகள், பிபுரோமுக்கு எதிரான நுண்ணுயிர்க்கொல்லிகள் மற்றும் மக்னீசியம் சல்பேட்.
 • 39 வாரங்கள் முடிவதற்கு முன்னர் மருத்துவ ரீதியல்லாமல் குறிக்கப்படும் பேற்றையும் அறுவை வழி பேற்றையும் தவிர்க்கவும்.

(37-39 வாரங்களில் ஏற்படும் பிரசவம் உகந்த விளைவுகளை உருவாக்காது. மருத்துவ ரீதியாக அறிவுறுத்தப்படாமல் 39 வாரங்கள் நிறைவுறாமல்  தூண்டப்படும் அல்லது அறுவைப் பேற்றைத் திட்டமிடக் கூடாது).

குறைப்பிரசவக் குழந்தையைப் பராமரித்தல்:

முடியக்கூடிய, மலிவான பராமரிப்பின் மூலம் நான்கில் மூன்று குறைப்பிரசவக் குழந்தைகளைக் காப்பாற்றிவிட முடியும். தீவிரமான பிறந்த குழந்தை கவனிப்பால் மேலும் இறப்பு விகிதத்தைக் குறைக்க முடியும். பெரும்பாலான குறைப்பிரசவக் குழந்தைகள் (84%) 32 வார கருவளர்ச்சிக்குப் பின்னரே பிறக்கின்றன. முக்கிய பிறந்த குழந்தைப் பராமரிப்பால் இவற்றின் இறப்பைத் தடுக்க முடியும்.

முக்கியமானதும் கூடுதலுமான சிசு பராமரிப்பில், வெப்பப் பராமரிப்பு, தாய்ப்பால் பராமரிப்பு, தொற்று தடுப்பு, தேவைப்பட்டால்,சிசு உயிர்ப்பு ஆகியவை குறைப்பிரசவக் குழந்தைகளுக்கு வழங்கப்படும்.

அளவில் சிறிய குழந்தைகளுக்கு கங்காரு தாய் பராமரிப்பு வழங்கலாம். 2000 கிராம் அல்லது குறைவான எடை கொண்ட குழந்தைகளுக்கு தொடர்ந்து இந்தப் பராமரிப்பு பரிந்துரைக்கப்படுகிறது. மருத்துவ ரீதியாக குழந்தை நிலையானவுடன் மருத்துவமனைகளில் இந்தப் பராமரிப்பைத் தொடங்கிவிட வேண்டும்.

சிக்கல்கள் இருக்கும் குறைப்பிரசவக் குழந்தைகளுக்குப் பராமரிப்பு:

 • தொற்றுக்கு நுண்ணுயிர்க்கொல்லிகளைக் கொண்டும் சிகிச்சை
 • சுவாச நோய்த்தாக்கங்களுக்குப் பாதுகாப்பான உயிர்வளி செலுத்தும் சிகிச்சை
 • சிசு தீவிர பராமரிப்பு.

ஆற்றுவதற்கு ஒவ்வொருவருக்கும் ஒரு பங்கு….. குறைப்பிரசவத்தைத் தடுக்கவும் குறைப்பிரசவக் குழந்தைப் பராமரிப்பை மேம்படுத்தவும் ஒவ்வொருவரும் உதவி செய்யலாம்.

குறிப்புகள்:

apps.who.int/iris/bitstream

 • PUBLISHED DATE : Aug 17, 2016
 • PUBLISHED BY : Zahid
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : Aug 17, 2016

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.