Arthritis.png

கீல்வாதம்

கீல்வாதம் மூட்டு நோயாகும் (மூட்டு அழற்சி). கீல்வாதத்தில் பல வகை உண்டு.

கீல்வாதத்தின் வகைகள்:

 • எலும்பு மூட்டு வீக்கம்: (osteo): இது பெரும்பாலும் வயது அல்லது காயத்தோடு தொடர்புடையது.
 • வாத மூட்டழற்சி: (rheumatoid): இதுவே பொதுவான கீல்வாத வகை.
 • இளம்பிள்ளை வாத மூட்டழற்சி: (juvenile rheumatoid): இவ்வகை கீல்வாதம் குழந்தைகளுக்கு உண்டாகும்.
 • பரவும் கீல்வாதம்: (infectious) இது உடலின் பிற பாகங்களில் இருந்து மூட்டுக்குப் பரவிய தொற்று.
 • மூட்டு வீக்கம்: (gout) மூட்டுகளின் அழற்சி.

மூட்டுகளின் குறிப்பிட்ட இடங்களில் தொடர்ந்து வலி இருக்கும். மூட்டுகளைச் சுற்றி ஏற்படும் அழற்சியினாலும், தினமும் உண்டாகும் தேய்மானத்தால் மூட்டுகள் சிதைவடைவதாலும், விறைப்பாக இருக்கும் வலியுள்ள மூட்டுகளில் கடுமையாகத் தசைகள் உராய்வதாலும் இவ்வலி உண்டாகிறது.

குறிப்புகள்:

www.cdc.gov
www.nlm.nih.gov
www.nhs.uk
www.arthritis.org

மூட்டுகளிலேயே பொதுவான அறிகுறிகள் ஏற்படுகின்றன. மூட்டு வீக்கத்துடன், வலியும் விறைப்புமே பரவலாகக் காணப்படுவது. உடலின் பல்வேறு பாகங்களையும் வெவ்வேறு அறிகுறிகளுடன் கீல்வாதத்தின் கோளாறுகளான தோல்முடிச்சு, வாதம் போன்றவை பாதிக்கலாம்.

 • நடப்பதில் சிரமம்
 • உடல்சோர்வும் களைப்பாக இருப்பதுபோன்ற உணர்வும்
 • உடலெடை குறைதல்
 • தூக்கக்குறைவு
 • தசை வலி
 • வலியுணர்வு
 • மூட்டுகளை அசைப்பதில் சிரமம்

குறிப்புகள்:
www.nhs.uk

அழற்சி ஏற்படும்போது உடலில் இருந்து வேதிப்பொருட்கள் இரத்தம் அல்லது பாதிக்கப்பட்ட திசுக்களுக்குள் வெளியேற்றப்படுகிறது. இதனால் அழற்சி அல்லது காயம்பட்ட பகுதிகளுக்கு இரத்தம் அதிகமாகப் பாய்ந்து சிவந்த நிறமும் சூடும் உண்டாகிறது. சில வேதிப்பொருட்கள் திசுக்களுக்குள் திரவங்களைக் கசியவைப்பதால் வீக்கம் ஏற்படுகிறது. இந்நிகழ்வுகள் நரம்புகளைத் தூண்டி வலி உண்டாக்குகின்றன.

குறிப்புகள்: www.cdc.gov

 • உடல் பரிசோதனை: மருத்துவர் மூட்டு அசைவின் அளவையும், மூட்டைச் சுற்றி இருக்கும் திரவத்தையும், வெப்பம், சிவந்த மூட்டுக்கள் ஆகியவற்றையும் சோதித்தறிகிறார்.
 • இரத்தப் பரிசோதனை: இது பொதுவாக வாத மூட்டழற்சிக்கு செய்யப்படுகிறது.
 • வாதக் காரணி: வாத மூட்டழற்சிக்கு இது சோதிக்கப்படுகிறது. இருப்பினும் வாதக்காரணி வாத மூட்டழற்சி இல்லாதவர்களுக்கும் அல்லது பிற தன்தடுப்பாற்றல் கோளாறுகள் உடையவர்களுக்கும் இருக்கக் கூடும். வாத மூட்டழற்சி உடையவர்களுக்கு வாதக்காரணி காணப்படவில்லை என்றால் நோயின் போக்கு கடுமையானதாக இல்லை எனலாம்.
 • ESR அளவுகளும் CRP அளவுகளும்: (Erythrocyte Sedimentation Rate and C - reactive protein): இவைகளும் அதிகரிக்கும். நோயின் செயல்பாட்டையும், ஒருவர் மருத்துவத்தினால் எவ்வளவு தூரம் குணம் அடைந்து வருகிறார் என்பதையும் இவ்வளவுகளைப் பயன்படுத்தி சோதிக்கலாம்.
 • பிம்ப ஊடுகதிர்கள்: எக்ஸ்-ரே, சி.டி ஊடுகதிர், எம்.ஆர்.ஐ. போன்றவற்றைப் பயன்படுத்தி எலும்பு, குருத்தெலும்பின் பிம்பத்தை உருவாக்கலாம். இதன் மூலம் மருத்துவர் கீல்வாதமா இல்லையா என்பதைச் சிறந்த முறையில் அறியமுடியும்.

உடல் பயிற்சி: வலி இருக்கும்போது உடல் பயிற்சி இறுதி தேர்வாகவே இருக்க முடியும். ஆனால் தசைகளை வலிமைப்படுத்துவதும் உடல் நீட்சி பயிற்சிகளும் உதவிகரமாக இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளன.

வலியில் இருந்து விடுபட: NSAID-கள் (Non-Steroidal Anti Inflammatory Drugs) போன்ற வலி நிவாரணிகள். வலி, அழற்சி, காய்ச்சல் ஆகியவற்றைத் தூண்டும் உடலில் உள்ள புரோஸ்டாகிளாண்டின்ஸ் (prostaglandins) போன்ற வேதியற் பொருட்களை NSAID-கள் கட்டுப்படுத்தும். எல்லாவிதமான கீல்வாதங்களிலும் மூட்டு வலியைப் போக்க இவைகள் உதவிகரமாக இருக்கின்றன.

அறுவை மருத்துவம்: நடக்க முடியாதவர்களுக்கும், நடப்பதில் மிகவும் சிரமம் உடையவர்களுக்கும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பொதுவாக செய்யப்படுகின்றன.

DMARD மருந்துகள் (Disease-modifying anti rheumatic drugs): பொதுவாக வாத மூட்டழற்சிக்கு இவை பயன்படுத்தப்படுகின்றன. மூட்டுகளைத் தாக்கும் நோய்த்தடுப்பு மண்டலத்தைத் இவை தடுக்கும் அல்லது வேகத்தைக் குறைக்கும். எடுத்துக்காட்டாக, மெத்தோடிரக்சேட் [(டிரக்சால்) methotrexate (Trexall)] , ஹைடிராக்சிகுளோரோகொய்ன் [(பிளாக்யுனில்) hydroxychloroquine (Plaquenil)] ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

உள் மூட்டு மருந்தூசி: மூட்டு அழற்சியுடைய நோய்களான வாத மூட்டழற்சி (rheumatoid), சாம்பல்படை மூட்டழற்சி (psoriatic) மூட்டுவீக்கம் (gout), தசைநாண் அழற்சி (tendinitis), குழிப்பை அழற்சிகளுக்கும் (bursitis) எப்போதாவது ஏற்படும் எலும்புமூட்டு வீக்கதிற்கும் (osteoarthritis) இச்சிகிச்சைமுறை பயன்படுத்தப்படுகிறது. ஒரு தோலடி மருந்தூசி மூலம் எதிர் அழற்சி மருந்துகளில் ஒன்று, பொதுவாக கோர்ட்டிகோஸ்ட்டெராய்டுகள் (corticosteroids), பாதிக்கப்பட்ட மூட்டுக்குள் செலுத்தப்படுகிறது.

குறிப்புகள்: 

www.arthritis.org

www.cdc.gov

 • PUBLISHED DATE : May 18, 2015
 • PUBLISHED BY : NHP CC DC
 • CREATED / VALIDATED BY : NHP Admin
 • LAST UPDATED ON : Jun 03, 2015

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.