வெப்ப நோய்களும் வெப்ப அலையும்

கடுமையான வெப்பத்தாலும், உலகம் வெப்பமயம் ஆகி வருவதாலும் வெப்ப அலையாலும் உண்டாகுபவையே வெப்ப நோய்கள். மனித ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அதிக வெப்பம் வெப்ப அலை என அழைக்கப்படுகிறது. தட்பவெப்ப நிலை மாற்றம் சராசரியான வெப்ப அளவை அதிகரிப்பதால் கடுமையான வெப்ப அலை உண்டாகும் சாத்தியக் கூறு ஏற்படுகிறது. கோடை காலத்தின் கடுமையான வெப்பம் மானிட ஆரோக்கியத்திற்கு ஏற்படுத்தும் பாதிப்பை, ஈரப்பத அதிகரிப்பு கூட்டுகிறது. வெப்ப அலை, வளர்ந்து வரும் பொது சுகாதாரப் பிரச்சினையாகும்.

மிக அதிகமான வெப்பம், வெப்பச் சொறி, வீக்கம், பிடிப்பு, தசைவலிப்பு போன்ற சிறு நோய்களையும், உணர்விழப்பு, சோர்வு மற்றும் வெப்பத்தாக்கம் போன்ற ஆபத்தான நோய்களையும் உருவாக்கும். வெப்பம் தொடர்பான நோய்களில் வெப்பத்தாக்கமே கடுமையானது. வெப்பத்தாக்கம் ஏற்படுபவர்களில் மரண விகிதம் மூன்றில் ஒன்றாகும்; தாக்கமடைந்துத் தப்பிப்பவர்களுக்கு ஏற்படும் நரம்புச் சிதைவு விகிதம் ஐந்தில் ஒன்றாகும்.

வெப்பம் சம்பந்தப்பட்ட நோய்களில் அடங்குவன:

 • வெப்பச் சொறி: வெப்ப காலத்தில் தோலில் உள்ள வியர்வை நாளங்கள் அடைபட்டாலோ வீங்கினாலோ அசௌகரியமும் அரிப்பும் ஏற்பட்டு சிறிய, சிவப்புக் கொப்புளங்கள் உருவாகும்.
 • வெப்பப் பிடிப்பு: வெப்பத்தால் நீர், உப்பு மற்றும் தாதுக்களை உடல் இழப்பதால் வெப்ப காலங்களில் உடல் பயிற்சி செய்தபின் தசைப்பிடிப்புகள் உருவாகின்றன.
 • வெப்பவீக்கம்: வெப்பமான சூழலில் நீண்ட நேரம் உட்காரும்போது அல்லது நிற்கும்போது காலிலும் கையிலும் வீக்கம் ஏற்படலாம்.
 • வெப்பத் தசைவலிப்பு: வெப்பமான சூழலில் குறுகிய கால மனஅழுத்தத்தால் இது உண்டாகிறது.
 • வெப்ப மயக்கம்: இது குறைந்த இரத்த அழுத்தத்தால் ஏற்படுகிறது. வெப்பத்தால் இரத்தக் குழல்கள் விரிவடைகின்றன. புவியீர்ப்பால் உடல் பாய்மங்கள் கால்களில் செல்லுகின்றன.
 • வெப்பச்சோர்வு: வெப்பமான தட்பவெப்ப நிலையில் உடல்பயிற்சி அல்லது வேலை செய்யும் ஒருவர் இழக்கும் பாய்மத்துக்கு ஈடாக போதுமான பாய்மங்களை உட்கொள்ளவில்லை என்றால் பொதுவாக சோர்வு உண்டாகும்.
 • வெப்பத்தாக்கம்: இது ஒரு கடும் வெப்ப நோய். உடல் வெப்பம் 40 °C (104 °F) யைத் தாண்டும். உடல்வெப்பப் பராமரிப்புக் குறைவு ஏற்பட்டு நரம்பியல் செயலிழப்பு உண்டாகும். இதனை கதிர்த்தாக்கம் என்றும் அழைப்பர்.

வெப்பத்தாக்கம் ஒரு மருத்துவ அவசர நிலை ஆகும். உடனடியாக மருத்துவம் அளித்தாலும் உயிருக்கு ஆபத்துள்ளது. கடுமையான நீண்டகால பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.

வெப்பமண்டலப் பகுதியில் வெப்பம் தொடர்பான பிரச்சினைகள் பரவலாக இருக்கும். மித வெப்ப்ப் பகுதிகளிலும் உலக வெப்பமயமாதல் காரணமாக இப் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன. அதிக அளவில் இச்சம்பவங்கள் சவுதி அரேபியாவில் பதிவாகின்றன (45-1300/100000).

இந்தியாவில் வட மற்றும் மேற்குப் பகுதிகளில் அடிக்கடி வெப்பத் தாக்கம் உண்டாகிறது. இராணுவத்தில் சேருவோருக்கு இடையில் உடல் உலைவினால் ஒரு சில வெப்பத்தாக்க நேர்வுகள் நிகழுகின்றன. 2015-ல் (ஏப்ரல்-ஜூன்) சராசரி அதிகபட்ச வெப்பநிலையை விட  6°C யிலிருந்து 8°C வரை வெப்பம் அதிகரித்தது. இதனால் எழுந்த வெப்ப அலையால் 2422 மனித மரணங்கள் நிகழ்ந்தன. ஆந்திரப்பிரதேசம், தெலுங்கானா, ஒடிசா, குஜராத், இராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், மகாராஷ்ட்டிராவின் விதர்பா பகுதி, பீகார், ஜார்க்கண்டு மற்றும் தில்லி பகுதிகளே வெப்ப அலைப் பருவங்களில் மிகவும் பாதிக்கப்படுகின்றன.

குழந்தைகள், வயதானவர்கள், நீடித்த நோயாளிகள், வெளிவேலையாட்கள், நடைபாதை மற்றும் குடிசைவாழ் மக்கள், தெரு வணிகர்கள், ரிக்சாக்காரர்கள் ஆகியோர் வெப்பம் தொடர்பான நோய்த்தாக்கும் ஆபத்துள்ளவர்கள்.

வெப்பம் தொடர்பான நோய்கள் பற்றிய விழிப்புணர்வு அதிகமாக இருந்தால் ஆரம்பக் கட்டத்தில் இக்கோளாறுகளைத் தடுக்கவும், அறிந்துகொள்ளவும், மருத்துவம் அளிக்கவும் முடியும். வெப்ப நோய்கள் பற்றியப் பொதுக் கல்வி, நடத்தை மாற்றங்கள், கட்டுப்பாடான மதுப்பழக்கம், கண்டிப்பான ஓய்வு, நீராகாரங்கள், இணக்கமான தட்பவெப்பநிலை, சூடான பகுதிகளில் குளிர்விக்கும் வசதிகள் ஆகியவற்றால் நோய்த் தாக்கத்தையும் மரண விகிதத்தையும் குறைக்க முடியும். வெப்பச் சூழல்களில் உடலைக் குளிர்ச்சியாகப் பேணி நீர்ச்சத்திழைப்பைத் தவிர்த்தாலே பெரும்பான்மையான வெப்பத் தொடர்பு நோய்களைத் தடுத்துவிட முடியும்.

மேலும் தகவலை அறிய:

“Guidelines for Preparation of Action Plan – Prevention and Management of Heat-Wave”, 2016 by National Disaster Management Authority, Government of India-

ndma.gov.in/images/guidelines

குறிப்புகள்:

ndma.gov.in/images/guidelines/

ndma.gov.in/images/pdf/HAP2015.

Mehta SR et al, Heat Stroke, MJAFI 2003; 59: 140-143, accessed from medind.nic.in/

searo.who.int/india/topics/occupational_health/

euro.who.int/__data/assets/pdf_file/

who.int/globalchange/publications/WMO_

வெப்பம் தொடர்பான நோய்களின் பல்வேறு விதமான அறிகுறிகள் வருமாறு:

 • வெப்பச்சொறி: முகம், கழுத்து, மேல் நெஞ்சு, அடிமார்பு, அரை, விதைப்பைப் பகுதிகளில் சிறிய, சிவப்பான, அரிக்கும் கொப்புளங்கள். எந்த வயதினரையும் பாதித்தாலும் பொதுவாகச் சிறுவர்களுக்கு அதிகமாக இருக்கும். ஸ்டேப்பிலோகாக்கஸ் தொற்று உண்டாகலாம்.
 • வெப்பப் பிடிப்பு: வெப்ப நோய்களின் ஆரம்பக் கட்ட அறிகுறி இது. இதனால் சோர்வும் பக்கவாதமும் ஏற்படலாம். அதிக வியர்வையும் உடலின் பெரிய தசைகளில் அனிச்சை வலிப்பும் ஏற்படுவது இதன் அறிகுறி.
 • வெப்பவீக்கம்: காலிலும் கையிலும் வீக்கம் ஏற்படலாம். வயதானவர்களுக்கு ஆபத்து அதிகம். இரத்த ஓட்டத்தைப் பாதிக்கும் பிற நோய்கள் இருந்தால் ஆபத்து இன்னும் அதிகம். குளிர்வெப்பப் பகுதியில் இருந்து உயர்வெப்பப் பகுதிக்குச் செல்வோருக்கு ஏற்படும் அபாயம் உண்டு.
 • வெப்பத் தசைவலிப்பு: இரத்த அழுத்தம், சுவாசப் பிரச்சினை, உணர்வின்மை, கூச்சம் அல்லது தசை வலிப்பு ஆகிய அறிகுறிகள் காணப்படும்.
 • வெப்ப மயக்கம்: தலை கிறக்கம், மயக்கம் ஆகியவை அறிகுறிகள். வெப்பத்தால் இரத்தக் குழல்கள் விரிவடைகின்றன. புவியீர்ப்பால் உடல் பாய்மங்கள் கால்களில் செல்லுகின்றன. இதனால் மயக்கம் ஏற்படலாம்.
 • வெப்பச்சோர்வு: கலைப்பு, பலவீனம், தலைவலி, குமட்டல், தசைப்பிடிப்பு மற்றும் வியர்வை ஆகியவை அறிகுறிகள். தோல் வெளிறி, குளிர்ச்சியுடனும், ஈரமாகவும் இருக்கும்.
 • வெப்பத்தாக்கம்: உடல் வெப்பம் 40 °C (104 °F) யைத் தாண்டும். சூடான சிவப்பான உலர் தோல், பலவீனமான நாடி, துரித மூச்சு, குமட்டல், அசாதரணமான குறை இரத்த அழுத்தம், மயக்கம் (வெறி, வலி, உணர்வின்மை, குழப்பம், ஆழ்மயக்கம்) ஆகியவை இதன் விளைவுகள்.

குறிப்புகள்:

ndma.gov.in/en/media-public-awareness/disaster/

nhs.uk/Conditions/Heat-exhaustion-and-heatstroke/

cdc.gov/niosh/topics/heatstress/heatrelillness.html

who.int/globalchange/publications/WMO_WHO_

உடல் வெப்பம் அதிகரிக்கும் போது, இயல்பான வெப்பநிலையைப் பராமரிக்க உடல் வெப்பத்தைக் கடத்துகிறது. வியர்வையும் தோலுக்கு இரத்தம் பாய்தலும் உடலைக் குளிர்ச்சியாக வைக்க உதவுகின்றன. உடலைக் குளிர்ச்சியாக வைக்கப் போதுமான வெப்பத்தை உடலால் கடத்த முடியாதபோது வெப்பம் தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன. வெப்பமான சூழலில் அதி உடல் வெப்பம் துரிதமாக உருவாகிறது.

வெப்பம் தொடர்பான நோய்கள் அதிக உடல் வெப்பத்தை உண்டாக்குகின்றன. ஏனெனில், உடலால் பலனளிக்கும் வகையில் வெப்பத்தைக் கடத்த முடிவதில்லை. அல்லது வெளியில் இருந்து பெறும் வெப்பத்தின் அளவு அதிகமாக இருக்கும் (காய்ச்சலால் ஏற்படும் அதிக வெப்பத்திற்கும் இதற்கும் வேறுபாடு உண்டு. காய்ச்சல் என்பது தொற்று அல்லது பிற நிலைகளால் உடலில் ஏற்படும் எதிர்வினை ஆகும்).

வெப்பச்சொறி: வியர்வை நாளம் அடைபட்டு வீங்கும்போது இது உருவாகிறது. வெப்பமான ஈரப்பதமான தட்பவெப்ப நிலையில் ஏற்படும் மிகையான வியர்வையே இதற்குக் காரணம்.

வெப்பவீக்கம்: வெப்பத்தால் இரத்த நாளங்கள் விரிவடையும் போது உடல் பாய்மங்கள் புவீயீர்ப்பு விசை காரணமாக கைகால்களில் செல்லுகின்றன. இயல்பை விட உப்பின் இழப்பு குறைவாக இருந்தால், அதிகமான உப்பின் அளவு பாய்மங்களை கைகால்களுக்குள் ஈர்க்கிறது. வயதானவர்களுக்கு சில கோளாறுகளால் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டுள்ள நிலை இருந்தால் அவர்களுக்கு வெப்ப வீக்க அபாயம் அதிகமாகும். குளிர் தட்பவெப்ப நிலையில் இருந்து வெப்பமான பகுதிகளுக்கு செல்வோருக்கும் வெப்ப வீக்க ஆபத்து அதிகரிக்கிறது.

வெப்பமயக்கம்: உடலைக் குளிர்ச்சியாக வைக்க வெப்பம் இரத்த நாளங்களை விரிவடையச் செய்யும்போது இது நிகழ்கிறது. இதனால் மூளைக்குச் செல்லும் இரத்த அளவு குறைந்து மயக்கம் உண்டாகிறது. ஒருவர் நீண்ட நேரமாக சூரிய வெப்பத்தில் நிற்கும்போது அல்லது கடுமையான உடல்பயிற்சியை வெயிலில் நின்று செய்யும்போது காலில் இரத்தம் சேர்வதால் வெப்ப மயக்கம் உண்டாகலாம்.

வெப்பக் களைப்பு: மிகை வெப்பம் நீண்ட நேரம் உடலில் படுவதால் பாய்மங்களையும் உப்பையும் உடல் இழக்கும் போது இது நேரும். வெயிலில் போதுமான நீர்ச்சத்தை உட்கொள்ளாமல் நீண்ட நேரம் உடற்பயிற்சி அல்லது வேலை செய்தால் இது ஏற்படும்.

வெப்பத் தாக்கம்: உடல் தன் வெப்ப நிலையைப் பராமரிக்க முடியாமல் உடல் வெப்பம் உயர்ந்துகொண்டே வரும்போது வெப்பத் தாக்கம் உண்டாகும். இதுவே ஆபத்தான வெப்பம் தொடர்பான கோளாறு. வெப்பம் விரைவாக அதிகரிக்கும். வியர்வைப் பொறிநுட்பம் கேடடையும். உடல் குளிர்ச்சி அடையாமல் போகும். 10-15 நிமிடங்களில் உடல் வெப்பம் 106 டிகிரி பாரன்ஹைட்டு  (41.1 டிகிரி செல்சியஸ்) அல்லது அதற்கு மேலும் செல்லும். தகுந்த சிக்சிச்சை அளிக்காவிட்டால் மரணம் அல்லது நிரந்தர ஊனம் உண்டாகலாம்.

இரண்டு வகையான வெப்பத் தாக்கம் உள்ளது:

 • உடலுலைப்பு வெப்பத் தாக்கம் (EHS): வெப்பச் சூழலில் கடுமையான உடற்பயிற்சி செய்யும் இளைஞர்களுக்குப் பொதுவாக இது ஏற்படும்.
 • பொதுவான உலைப்பற்ற வெப்பத்தாக்கம் (NEHS): உடல் அசைவற்ற முதியோரையும் மிகவும் இளம் குழந்தைகளையும் வெப்பச்சூழலின் போது வெப்ப அலை தாக்குவது. தொடர்ந்து வெப்பமான காலநிலை நிலவாத இடங்களிலேயே இது பரவலாகக் காணப்படும்.

ஆபத்துக்காரணிகள்: ஆண் பால்வினை, தூக்கக் குறைவு, உடல் பருமன், மோசமான உடல்நிலையியல், தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப மாறுதலின்மை, சிறுநீர்ப்பிரிப்பு சிகிச்சை, நீர்ச்சத்திழப்பு, காய்ச்சல் நோய்கள், மதுப்பழக்கம், வியர்வையைப் பாதிக்கும் தோல்நோய்கள், மிகையான பாதுகாப்புக் கவசங்கள், இயல்பான வெப்பப் பராமரிப்பு பதில்வினைகளைப் பாதிக்கும் மருந்துகள், வெப்பத்தாக்கத்தால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருத்தல்.

குறிப்புகள்

Mehta SR et al Heat Stroke, MJAFI 2003; 59: 140-143, accessed from medind.nic.in/  

emedicine.medscape.com/article/

cdc.gov/niosh/topics/heatstress/

பெரும்பாலான நேர்வுகளுக்கு மருத்துவ ரீதியாகவே நோய்கண்டறியப் படுகிறது. உடல் வெப்ப அளவைக் கணக்கிட்டு, வெப்ப உலைச்சலாலும் தாக்கத்தாலும் ஏற்பட்டுள்ள அறிகுறிகளை மதிப்பிடுதல் இதில் அடங்கும்.

அடிநிலைச் சோதனைகளில் அடங்க வேண்டியன:

இரத்த சோதனை:

 • வெப்பத் தாக்குதல் நோயாளிகளுக்கு முழு இரத்தக் கணக்கீடு, உயர்ந்த வெள்ளணு கணக்கீடு மதிப்பிடப் பட வேண்டும். தட்டணு அளவுநிலை குறைவாக இருக்கும்.
 • நடு நரம்பு மண்டலத் தூண்டலால், தமனி இரத்த வாய் சோதனையிலும், லாக்டிக் அமில ஆய்விலும் மூச்சுக் காரவேற்றம் காணப்படும். மற்றும், லாக்டிக் அமிலவேற்றம் காரணமாக வளர்சிதைமாற்ற அமிலவேற்றமும் காணப்படும்.
 • உலைவு வெப்பத் தாக்க மற்றும் திடீர்கல்லீரல் செயலிழப்பு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரை மிகும்.
 • மின்பகுபொருள் மதிப்பீடு:

o   சோடியம் – நோயின் ஆரம்பக் கட்டத்திலும் அல்லது சர்க்கரை நோயாளிகளுக்கும் பாய்ம உள்ளெடுப்புக் குறைவாலும் நீர்ச்சத்திழப்பாலும் சோடிய அளவு மிகைப்பு காணப்படும். நீர் போன்ற குறையழுத்தக் கரைசலையும் சிறுநீரிறக்கிகளையும் பயன்படுத்தும் நோயாளிகளுக்கு வியர்வையின் மூலம் மிகையாக சோடியம் இழப்பு ஏற்படுவதைக் கணிக்க முடிகிறது.

o   பொட்டாசியம் – வெப்பத் தாக்குதலின் ஆரம்ப கட்டத்தில் பொட்டாசியக் குறைபாடு பொதுவாக இருக்கும். தசை சிதைவுக்கு இது காரணம்.

 • கல்லீரல் செயல்பாட்டுச் சோதனை – வெப்பத்தாக்கத்தால் அஸ்பார்ட்டேட் அமினோடிரான்ஸ்ஃபெரேசு அளவும் (AST) அலனைன் அமினோடிரான்ஸ்ஃபெரேசு (ALT)  அளவும் கூடலாம்.
 • சிறுநீரகச் செயல்பாட்டுச் சோதனை – சிறுநீரகச் செயலிழப்புச் சிக்கல் கொண்ட நோயாளிகளுக்கு ஊனீர் யூரிக் அமில அளவு, இரத்த யூரியா நைட்ரஜன் மற்றும் ஊனீர் கிரியாட்டினின் அளவுகள் கூடுதல் பரவலானதே.
 • சிறுநீரில் மையோகுளோபுலின் இருப்பதைக் கண்டறிய சிறுநீரகச் சோதனை.

தசை செயல்பாட்டுச் சோதனை – தசை நசிவு ஏற்படும்போது தசையில் இருந்து கிரியாட்டினின் கினேஸ் (CK), லாக்டேட் டிஹைடிரோஜெனேஸ் (LDH), அல்டோலேஸ் மற்றும் மயோகுளோபுலின் ஆகியவை வெளியேற்றப் படுகின்றன.

மூளைத்தண்டுவடப் பாய்ம ஆய்வு – ஒரு குறிப்பற்ற வெள்ளணு மிகைப்பு மற்றும் மூளைத்தண்டுவடப் பாய்மக் கொழுப்பு அளவுகள் அதிகரிப்பு ஆகியவற்றைக் காட்டலாம்.

பிம்ப ஆய்வுகள்-

 • கணிம வரைவியல் அலகிடல் மூலம், மனநிலை பாதிப்பு கொண்ட நோயாளிகளுக்கு, நடுநரம்பு மண்டலக் காயம் இருப்பதைக் கண்டறியலாம்.
 • நெஞ்சுக் கதிர்வரைவியல், மூச்சுக்காற்றறைச் சுருக்கம், நிமோனியா, நுரையீரல் நசிவு அல்லது வீக்கம் போன்றவற்றைக் காட்டும்.

பிற சோதனைகள் -  

 • மின்னிதயவரைவியல்: சினோ இதய மிகைத்துடிப்பு நிமிடத்துக்கு 130-140 துடிப்புகளும், குறிப்பற்ற மற்றும் குருதியூட்டக்குறை ST-T அலைக் கோளாறுகளும் பொதுவாகவே காணப்படும்.

குறிப்புகள்:

emedicine.medscape.com/article/

வெப்பச்சொறி-

 • குறிப்பிட்ட மருத்துவம் இன்றியே அடங்கும்.
 • காற்றுப்பதன அறையில் இருந்து வியர்வையைக் குறைக்கவும். அடிக்கடி குளித்து மெல்லிய ஆடைகளை அணியவும்.
 • பாதிக்கப்பட்ட பகுதியை உலர்வாக வைக்கவும். மேற்பூச்சு எதிர்ஹிஸ்ட்டமின் மற்றும் நுண்ணுயிர்க்கொல்லிகளைப் பயன்படுத்தி அசௌகரியம் மற்றும் அரிப்பைத் தடுக்கலாம்.

வெப்பப் பிடிப்புகள் – ஓய்வு, உடலைக் குளிர்வித்தல், வாய்வழி நீர்ச்சத்தேற்றல்,  பிடிப்பு ஏற்பட்டுள்ள தசைகளை நீட்டிமடக்குதல் ஆகியவை சிகிச்சைகள் ஆகும். ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்தால் மருத்துவ கவனம் தேவை.

வெப்ப வீக்கம்: தட்பவெப்ப நிலை மாற்றத்துக்குப் பின் தானாகவே குறைந்து விடுவதால் தனியான சிகிச்சை தேவையில்லை. சிறுநீர்பிரிப்பிகள் பரிந்துரைக்கப்படுவதில்லை. கூடியமட்டும் வெப்பத்தைத் தவிர்க்கவும்.

வெப்பமயக்கம்: நோயாளியை குளிர்ச்சியான இடத்தில் ஓய்வு எடுக்க வைக்க வேண்டும். சிரை பழைய நிலை அடைவதற்காக மல்லாந்து படுக்க வைத்து காலையும் இடுப்பையும் சற்று உயர்த்தி வைக்கவேண்டும். மயக்கத்துக்கான் பிற ஆபத்தான காரணங்கள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

வெப்பச் சோர்வு:

 • நோயாளியைக் குளிர்ந்த நிழலான இடத்துக்கு அல்லது குளிர்பதன அறைக்கு மாற்றவும்.
 • ஆடைகளைக் களையவும்.
 • குளிர்ந்த நனைந்த துணி அல்லது குளிர் நீரை மேல் இட்டு மின்விசிறியை இயக்கவும்.
 • நோயாளியைக் கீழே படுக்க வைத்து சிரை பழையநிலை அடைய
 • கால் மற்றும் இடுப்பைத் தூக்கி வைக்கவும்
 • வாய்வழி நீர்ச்சத்து அளிக்கவும். வாந்தி இருந்தால் நரம்புவழி அளிக்கவும்
 • மிகை உடல் வெப்பம்  39°C மேல் இருந்தால் அல்லது மனநிலை பாதிப்பு, நிலைத்த குறை இரத்த அழுத்தம், ஆகியவை இருந்தால் வெப்பத்தாக்கமாகக் கருதி நோயாளியை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவும்.

வெப்பத் தாக்கம்-

 • இயக்க வெப்பநிலையை அளக்கவும் (குத வெப்பம்): 40°C க்கு மேல் இருந்தால் குளிர்ந்த இடத்துக்குக் கொண்டு செல்லவும்.
 • ஆடைகளை அகற்றவும்.
 • வெளிப்புறமாகக் குளிர்விக்கவும்: கழுத்து, அக்குள் மற்றும் அரையில் குளிர் பொதி வைக்கவும். தொடர் விசிறல் (அல்லது மருத்துவ ஊர்தி பலகணியைத் திறந்து வைத்தல்). தொடர்ந்து தோலில் 25–30°C நீரைத் தெளித்தல்.
 • மயக்கத்தில் இருக்கும் நோயாளியை பக்கவாட்டில் படுக்க வைக்க வேண்டும்.
 • மூச்சுத் திணறலைக் குறைக்க கற்றுப்பதையைச் சீராக்க வேண்டும்.
 • 4 l/min  உயிர்வளியும் சலைனும் அளிக்கவும்.
 • உடனடியாக அவசரப் பிரிவுக்குக் கொண்டு செல்லவும்

குறிப்புகள்-

who.int/globalchange/publications/WMO_

ndma.gov.in/en/heat-do-s-and-dont-s.

வெப்பம் தொடர்பான நோய்கள் அனைத்தும் தடுக்கக் கூடியவையே. வெப்ப அலைகளால் உண்டாகும் நோய் மற்றும் இறப்பு விகிதத்தைக் குறைக்க ஆங்காங்குள்ள சமுதாயங்களின் தேவைக்கு ஏற்ப மாநில/மாவட்ட அளவில் ஒரு வெப்ப ஆரோக்கிய நடவடிக்கைத் திட்டத்தை (HHAP)  உருவாக்க வேண்டும்.

இந்திய அரசின் தேசிய பேரிடர் மேலாண்மை அதிகாரம், வெப்ப அலைவீச்சுக் காலங்களில் வெப்பம் தொடர்பான நோய்களைத் தடுக்க “வெப்ப அலைவீச்சைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் செயல்திட்டத்தை உருவாக்கும் வழிகாட்டுதல்கள்” ஒன்றை வெளியிட்டுள்ளது*.

பின்வரும் நடவடிக்கைகளை உள்ளடக்கி வெப்ப ஆரோக்கிய நடவடிக்கைத் திட்டத்தை (HHAP)  உருவாக்கலாம்.

பொது விழிப்புணர்வும் சமுதாயம் முழுமையையும் அடையும் நடவடிக்கைகளும்: வெப்ப அலை வீச்சின் ஆபத்துகளையும் தொடர்பான மரணம் மற்றும் நோய்களைத் தடுக்கும் நடவடிக்கைகளைப் பற்றி கூறுதல்.

வெப்ப – ஆரோக்கியம் எச்சரிக்கை அமைப்பு (HHWSs): முன் கணிக்கப்பட்ட மிகையான மற்றும் கட்டுக்கடங்காத வெப்ப நிலைகளைப் பற்றி சமுதாயம்/குடியிருப்போருக்குத் துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்புடன் முன்னெச்சரிக்கை செய்யும் அமைப்பு.

வெப்ப எச்சரிக்கை குறிகளுக்கான அடையாள நிறம் (அகமதாபாத் வெப்ப செயல் திட்டம் 2015):

சிவப்பு எச்சரிக்கை நாளின் மிக அதிகமான வெப்ப எச்சரிக்கை
ஆரஞ்சு எச்சரிக்கை வெப்ப எச்சரிக்கை நாள்
மஞ்சள் எச்சரிக்கை வெப்பமான நாள்
வெள்ளை இயல்பான நாள்

சுகாதாரப் பராமரிப்பாளர்களுக்கு இடையில் திறன் மேம்படுத்தல்: வெப்பம் சம்பந்தப்பட்ட நோய்களை அறிந்து செயல்படல்.

வெப்பத்துக்கு உட்படுதலைக் குறைக்க நடவடிக்கைகளும் ஆதரவு நடவடிக்கைகளை அளித்தலும் – எங்கும் குடிநீர் கிடைக்கச் செய்தல், மிக வெப்பமான நாளில் குளிர்ச்சியான தங்கும் இடங்கள், தகுந்த வீட் இல்லாதவர்களுக்கு குளிர் மையங்கள் அமைத்து அவற்றைப் பயன்படுத்தப் பொதுமக்களை வலியுறுத்தல், மிக ஆபத்தான இடங்களை நகரத்திலும் சமுதாயங்களிலும் கண்டறிதல் (நகர்ப்புற வெப்பத் தீவுகள்*), அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்து செயல்படுதல்.

(*அருகில் இருக்கும் கிராமப் புறத்தை விட அதிக வெப்பமாக இருக்கும் உருவாக்கப்பட்ட பகுதிகளே நகர்ப்புற வெப்பத் தீவுகள். கோடை கால உச்ச கட்ட ஆற்றல் தேவையை அதிகரித்தல், காற்றுப்பதனச் செலவை அதிகரித்தல், காற்று மாசு மற்றும் பசுமைக்குடில் வாயு உமிழ்வு, நீரின் தரம், வெப்பம் தொடர்பான நோய், இறப்பு விகிதம் ஆகியவற்றினால் சமுதாயங்களைப் பாதிக்கக் கூடும்.

நீண்ட கால நடவடிக்கைகள்: நகர்ப்புற வெப்பத் தீவுகளின் பாதிப்பைக் குறைக்க:

 • மரம் மற்றும் தாவரங்களை நடுதல்: நிழல் தந்து நீராவிவெளியேற்றுவது மூலம் குளிர்வித்து பரப்பு மற்றும் காற்று வெப்பநிலையைத் தணிக்கிறது.
 • பசுமைக் கூரை அல்லது கூரைத் தோட்டங்களை அமைக்கவும்: இது கூரையின் மேல் வளரும் ஒரு தாவர அடுக்கு ஆகும். பசுமைக் கூரை நிழல் தந்து நீராவிவெளியேற்றம் மூலம் காற்றில் இருந்து வெப்பத்தை அகற்றி, கூரைப் பரப்பு மற்றும் சுற்றுப்புறக் காற்றில் இருந்து வெப்பத்தைக் குறைக்கிறது.
 • குளிர் கூரை அல்லது பிரதிபலிப்புக் கூரை அமைக்கவும்: சூரிய ஒளியை பிரதிபலித்து, கூரை வெப்பத்தைக் குறைத்து வீட்டின் வெப்பத்தைக் குறைக்கிறது.
 • ஆற்றல் சேமிக்கும் சாதனங்களையும் கருவிகளையும் பயன்படுத்தவும்.

வெப்ப அலையின் பாதிப்புகளைக் குறைக்கவும், ஆபத்தான வெப்ப நோய்களைத் தடுக்கவும், சமுதாய மற்றும் தனிநபர் அளவில் செய்யவேண்டியவையும் கூடாதவையும் பரிந்துரைக்கப்படுகிறது:

செய்க

வெப்ப அலையின் சாத்தியக் கூறு பற்றி அறிய வானொலி, தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்களைக் கவனித்து வரவும். தாகம் இல்லாவிட்டாலும் தொடர்ந்து நீர் அல்லது நீராகாரங்களை(மதுவற்றது) அருந்தி வரவும் (வீட்டில் செய்யப்படும் மோர், கஞ்சி, எலுமிச்சைச் சாறு, இனிப்புத்தயிர், பன்னா (மாங்காய்ப் பிழிவு).

 • பழங்கள் அல்லது பச்சடி (சுத்த நீரால் கழுவி) போன்ற எளிய, குளிர்ந்த, எளிதில் செரிக்கும் உணவுகளை உண்ணவும்.
 • தளர்வான, இலேசான, வெளிர் நிற மற்றும் துளைகள் உள்ள பருத்தி ஆடைகளை அணியவும்.
 • பாதுகாப்புக் கண்ணாடிகள், குடை/தொப்பி, காலணி அல்லது செருப்பு அணிந்தே வெயிலில் செல்ல வேண்டும்.
 • பயணம் செய்யும்போது கூடவே குடிநீர் எடுத்துச் செல்லவும்.
 • வெளியில் வேலை செய்யும் போது தொப்பி அல்லது குடை பயன்படுத்துவதோடு ஈரத் துணியை தலை, கழுத்து, முகம் மற்றும் அவயவங்களில் பயன்படுத்தவும்.
 • வெப்பத்தால் பாதிக்கப் படக்கூடிய உதவி தேவைப்படும் குழந்தைகள், முதியோர், நோயாளிகள், பலவீனமானவர்கள், நண்பர்கள், குடும்பத்தார், அயலார் ஆகியோரை அடிக்கடி கவனத்தில் கொள்ளவும்.
 • அதிக வெப்பத்தின் அறிகுறிகளையும் வெளிப்பாடுகளையும் அறிந்து வைத்துக் கொள்ளவும். மயக்கம் அல்லது நோய் உணர்வு ஏற்பட்டால் மருத்துவரை உடனே அணுகவும்.
 • மிருகங்களை நிழலில் வைத்து அதிக அளவில் குடிநீர் அளிக்கவும்.
 • வீட்டைக் குளிர்ச்சியாக வைக்கவும், திரைகள். கதவுகள் மற்றும் வெயில் மறைப்புகள் பயன்படுத்தவும், இரவில் பலகணியைத் திறந்து வைக்கவும். தகரம் அல்லது அலுமினியத் தகடு போன்ற பிரதிபலிப்பான்களை சன்னலில் பயன்படுத்தலாம் (அட்டையில் சுற்றி சன்னல் கண்ணாடிக்கும் கதவுக்கும் இடையில் வைக்கலாம்).
 • விசிறிகளைப் பயன்படுத்தவும் (தூரத்தில் வைக்கவும். சுடு காற்று நீர்ச்சத்திழப்புக்கு வழிகோலும்).
 • குளிர் குளியல்.
 • பணி இடத்தில் குளிர் குடிநீர் வழங்கவும்.
 • நேரடி சூரிய ஒளிக்கு செல்லக்கூடாது என பணியாளர்களை எச்சரிக்கவும்.
 • கடுமையான வேலைகளை நாளின் வெப்பம் குறைந்த நேரத்துக்கு திட்டமிடவும்.
 • வெளி வேலைகளுக்கு ஓய்வு நேரங்களை அதிகப்படுத்தி கால அளவைக் கூட்டவும்.
 • பெண் பணியாளர்கள் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டுள்ள பணியாளர்கள் மேல் கூடுதல் கவனம் செலுத்தவும்.

செய்யவேண்டாதவை

 • குழந்தைகளையும் செல்லப் பிராணிகளையும் கொஞ்ச நேரம் கூட நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தில் விடக் கூடாது.
 • குறிப்பாகப் பிற்பகல் 12-3 மணி வரை வெயிலில் செல்ல வேண்டாம்.
 • கட்டி நிற, பளுவான, இறுகிய ஆடைகளைத் தவிர்க்கவும்.
 • மது, மிகையாகத் தேனீர், காப்பி மற்றும் அதிகச் சர்க்கரை சேர்த்த பானங்களை அருந்தக் கூடாது.
 • கனமான, செரிக்கக் கடினமான மற்றும் பழைய உணவுகளை உண்ணக்கூடாது.
 • வெளி வெப்பம் அதிகமாக இருக்கும் போது கடின உழைப்பைத் தவிர்க்கவும்.
 • பிற்பகல் 12.00-3.00 மணி வரை வெளி வேலைகளைத் தவிர்க்கவும்.
 • உச்ச வெப்பம் உள்ள நேரங்களில் சமைப்பதைத் தவிர்க்கவும். சன்னல் கதவுகளைத் திறந்து சமயலறையைக் காற்றோட்டம் உடையதாக்கவும்.

தட்பவெப்பத்தழுவல்:

குளிர் பிரதேசத்தில் இருந்து வெப்பமான ஒரு தட்பவெப்ப நிலைக்கு வந்தவர்களுக்கு வெப்ப நோய் ஆபத்துள்ளது. தங்கள் உடல் வெப்பத்தைத் தாங்கும் அளவுக்கு சீரான பின்னரே அவர்கள் திறந்த பகுதிகளில் செல்ல வேண்டும். அதிக அளவில் நீர் அருந்த வேண்டும். வெப்ப அலையின் போது உடல் படிப்படியாக வெப்பமான தட்பவெப்ப நிலையைத் தழுவிக் கொள்ளுமாறு செய்ய வேண்டும்.

அவசரகாலப் பெட்டி-

 • தண்ணீர்க் குடுவை
 • குடை/தொப்பி/தலை மூடி
 • கைத் துண்டு
 • கை விசிறி

வெப்ப நோயால் துன்பப்படுவோருக்கு:

 • குளிர்ந்த நிழலான இடத்துக்குக் கொண்டு செல்லவும்.
 • தண்ணீர் அல்லது நீர்ச்சத்து உப்பு அளிக்கவும் (மயக்கமாக இருந்தால்).
 • காற்று விசிறவும்.
 • மது, காஃபின் அல்லது வாயு உள்ள பானங்களைத் தவிர்க்கவும்.
 • காற்றோட்டத்துக்கு ஏற்றத் தளர்வான ஆடைகள்.
 • அறிகுறிகள் சீர்கெட்டாலோ, நீண்டாலோ அல்லது நோயாளி மயக்கமாக இருந்தாலோ மருத்துவரிடம் கலந்து ஆலோசிக்கவும்.

குறிப்புகள்-

*ndma.gov.in/images/guidelines/guidelines-heat-wave.

ndma.gov.in/en/heat-do-s-and-dont-s.html

ndma.gov.in/en/media-public-awareness/

epa.gov/sites/production/files/2014-07/

epa.gov/heat-islands/what-you-can-do-reduce-heat-

ndma.gov.in/images/pdf/HAP2015.

hndma.gov.in/en/heat-emergency-kit.

wikihow.com/Survive-a-Heat-Wave

who.int/globalchange/publications/WMO_

 

 • PUBLISHED DATE : May 12, 2016
 • PUBLISHED BY : Zahid
 • CREATED / VALIDATED BY : R. Davidson
 • LAST UPDATED ON : May 12, 2016

Discussion

Write your comments

This question is for preventing automated spam submissions
The content on this page has been supervised by the Nodal Officer, Project Director and Assistant Director (Medical) of Centre for Health Informatics. Relevant references are cited on each page.